பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

பிரதமராக மோடி பதவியேற்ற எட்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில்,  பறையரிலிருந்து விஷ்வ குருவாக உயர்ந்தவர் ( from a pariah to a viswaguru ) என  குறிப்பிட்டு பதிவு செய்திருந்தார்.

 

பறையர் என்ற சொல்லை  பயன்படுத்தியதால் அண்ணாமலைக்கு எதிராக  விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  வலியுறுத்தப்பட்டிருந்தது. 

 

காவல்துறை வழக்கு பதிவு செய்யாததால்,  விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் காசி என்பவர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் பாஜக தலைவர் அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். இந்த மனு மீதான உத்தரவை வரும் 7 ம் தேதிக்கு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தள்ளிவைத்துள்ளார்.



 









 பாடலாசிரியர் சினேகனுக்கு நிபந்தனை முன்ஜாமீன்

 

அறக்கட்டளை நிதி தொடர்பாக பாஜக நிர்வாகி ஜெயலட்சுமியை அவதூறாக பேசிய வழக்கில் பாடலாசிரியர் சினேகனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 

சினேகம் பவுன்டேசன் என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை திரைப்பட பாடலாசிரியர் சினேகன்   நடத்தி வருகிறார். சினேகம் டிரஸ்ட் என்ற பெயரில் நடிகையும், தமிழக பாஜக மகளிர் அணி மாநில துணை தலைவியுமான ஜெயலட்சுமி அறக்கட்டளை நடத்திவருகிறார்.

 

அறக்கட்டளைகளின் பெயர்கள் ஒரே மாதிரியாக உள்ளதால் தனது அறக்கட்டளைக்கு வரவேண்டிய நன்கொடைகள் ஜெயலட்சுமியின் அறக்கட்டளைக்கு திருப்பிவிடப்படுவதாக கூறி சினேகன் சென்னை காவல் ஆணையரகத்தில் அளித்த் புகாரில் ஜெயலட்சுமி மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் திருமங்கலம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

 

சினேகன் தனக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி ஆபாசமாக பதிவிட்டு வருவதாக ஜெயலட்சுமி அளித்த புகாரில், சினேகன் மீது பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி பாடலாசிரியர் சினேகன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.அல்லி,  தினமும் காலை 10 மணிக்கு திருமங்கலம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும். சாட்சிகளை கலைக்க கூடாது என்று நிபந்தனைகளுடன் சினேகனுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.