கிட்டதட்ட 90 ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து நாட்டின் தலைநகர் இலண்டன் மாநகரில், 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற வட்டமேசை மாநாட்டிற்கு இந்தியாவிலிருந்து மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகளை பிரித்தானிய நாட்டின் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் விருந்துக்கு அழைத்திருந்தார். ஒவ்வொரு பிரதிநிதியும் தம்மை அறிமுகப்படுத்தி கொண்டு மன்னருடன் கைக்குலுக்கிக் கொண்டனர். ஒரே ஒரு மனிதர் மட்டும் கைகுலுக்காமல் தன் கையை இழுத்துக் கொண்டார், திகைத்து நின்ற மன்னர், காரணம் கேட்டார்.


இந்தியாவில் இது தான் நடைபெறுகிறது

 

அப்போது “நான், எங்கள் நாட்டில் ஒரு தீண்டத்தகாதவன், என்னை நீங்கள் தொடக்கூடாது, நான் இந்தியாவில் தீண்டப்படாத சமுதாயத்திலிருந்து வந்தவன்” என்று கூறினார். தாம் அணிந்திருந்த கோட்டில், ‘தீண்டப்படாதவன்’ என்று எழுதி மாட்டிக் கொண்டிருந்தாராம். மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் கை குலுக்க முனைந்தபோது, மறுத்து, தன்னைத் தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளும் என்ற நிலை உள்ளதை உணர்த்தினார். ஆனால், மன்னரோ அவரை அருகே அழைத்து, கை குலுக்கினார். அப்போது மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் “உங்கள் நாட்டில் இப்படிப்பட்டவர்கள் யாராவது கீழே விழுந்துவிட்டால் கூடத் தூக்கிவிட மாட்டார்களா? அவர்கள் சாதியின் பெயரால் அப்படியே கிடக்கத்தான் வேண்டுமா?”-என விழி பிதுங்க வினாத் தொடுத்தார்.“ உங்கள் ஆட்சியிலே, இந்தியாவிலே இது தான் நடைபெறுகிறது” என்றார் . அன்று ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஆங்கிலேயே தேசத்தில் உயர்ந்து ஓங்கி ஒலித்த அந்த குரலுக்கு சொந்தமான மாமனிதர் பெயர்தான் இரட்டைமலை சீனிவாசன்.



இரட்டைமலை சீனிவாசன் (  rettamalai srinivasan  ) 

 

இரட்டைமலை சீனிவாசன் செங்கல்பட்டு மாவட்டத்தில், மதுராந்தகம் அருகில் உள்ள கோழியாளம் என்ற சிற்றூரில்,1859 ஜூலை மாதம்  7-ஆம் நாள் பிறந்தார். இரட்டைமலை என்பது அவருடைய தந்தையின் பெயர், தாயாரின் பெயர் ஆதியம்மை. கோழியாளத்தில் வசித்து வந்த இவருடைய  குடும்பம் வறுமை காரணமாகவும் சாதியக் கொடுமை காரணமாகவும் தஞ்சை நோக்கி இடம் பெயர்ந்தனர். அங்கு அதைவிடக் கொடிய சாதிய அடக்குமுறை தாண்டவமாடியதால், இவரது குடும்பத்தார் அங்கிருந்து கோயம்புத்தூர் சென்றனர். கோயம்புத்தூரில் கல்வி பயின்ற இவர் குடும்ப வறுமை காரணமாக பள்ளிக் கல்வியோடு தனது படிப்பை முடித்துக் கொண்டார். 

 

பறையர் மகாசன சபையை

 

தீண்டாமைக் கொடுமைக்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது என்பதைப் பற்றியே எந்நேரமும் எண்ணிக் கொண்டிருந்த சீனிவாசன்,  நீலகிரியில் ஓர் ஆங்கிலேயர் நிறுவனத்தில் எழுத்தராக வேலைக்குச் சேர்ந்தார். 10 ஆண்டுகள் அங்கு பணியாற்றிய பின் 1890 இல் சென்னைக்கு வந்தார். 1891 ஆம் ஆண்டு பறையர் மகாசன சபையைத் தோற்றுவித்தார். அப்பொழுது எப்படி ஒடுக்கப் படுகிறோமோ அப்பெயராலேயே சுதந்திரம் பாராட்ட வேண்டும் என்னும் அறிவிப்போடு ‘பறையன்’ என்னும் இதழை இரட்டைமலை சீனிவாசன் 1893-ம் ஆண்டு தொடங்கினார். முதலில் மாத இதழாகவும், பின்னர் வார இதழாகவும் 1900-ம் ஆண்டு வரை இந்த இதழ் தவறாமல் வெளியானது.



 

ஐசிஎஸ் தேர்வை இங்கிலாந்தில் நடத்துவதென ஆங்கில அரசாங்கம் முடிவு செய்தபோது, அதை இந்தியாவில் நடத்த வேண்டும் என்று இந்திய தேசியவாதத் தலைவர்கள் கோரினார்கள். அது தொடர்பான கோரிக்கை விண்ணப்பம்கூட சில நூறு கையொப்பங்களோடு அரசிடம் அளிக்கப்பட்டது. ஆனால், இந்தியாவில் நடத்தினால் உயர் வகுப்பினர் பங்குபெற்று தங்கள் மீது சாதிபேதம் பாராட்டுவார்கள் என்பதால், அந்தத் தேர்வை இங்கிலாந்திலேயே நடத்த வேண்டும் என்று பல்வேறு ஒடுக்கப்பட்ட குழுவினரும் மாற்றுக் கருத்தை முன்வைத்தார்கள். இதில், இரட்டை மலை சீனிவாசன் தலைமையில் 1894 ஆம் ஆண்டு 3,412 பேரின் கையொப்பங்களோடு இங்கிலாந்துக்கு எதிர் விண்ணப்பம் அனுப்பப்பட்டது. 

 

 

 



 

இரட்டைமலை சீனிவாசன் சட்டப்பேரவையில் 1923 நவம்பர் முதல் 1939-இல் சட்டப்பேரவைக் கலைக்கப்படும் வரை உறுப்பினராகப் பணியாற்றினார். அப்போது ஆதிதிராவிட மக்களின் வாழ்வியல் உரிமைகளுக்காக ஓயாது குரல் கொடுத்து வந்தார். 20.01.1922-ல் எம்.சி. இராசா சட்டப்பேரவையில் கொண்டு வந்த தீர்மானத்தின்படி பறையர், பள்ளர் என்ற பெயர் நீக்கப்பட்டு ஆதிதிராவிடர் என்ற பெயர் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசாணை எண் 817 மூலம் 25.03.1922 ஆம் தேதி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதித்திராவிடர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பெயர் மாற்றம் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் பல பத்திரப் பதிவு அலுவலகங்களில் பறையன், பஞ்சமன் என்றே பதிவு செய்யப்படுகிறது. இதை அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என இரட்டைமலை சீனிவாசன் 25.08.1924 ஆம் தேதி சட்டப்பேரவையில் முறையிட்டார். உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அன்றைய முதல்வர் பனகல் அரசர் பதிலளித்தார்.



 

அனைத்து சாதியினரும்

 

பரம்பரை மணியக்காரர்கள் உயர்சாதியினராக உள்ளனர். அவர்கள் சேரிகளுக்கு வருவதில்லை, எனவே பரம்பரை மணியக்காரர் முறையை நீக்கி அனைத்து சாதியினரும்,  தாழ்த்தப்பட்டவர் உள்பட மணியக்காரராக வர வழிவகை செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் அரசுக்குக் கோரிக்கை வைத்தார். இதே கோரிக்கையை அருந்ததிய சாதி உறுப்பினரான எல்.சி. குருசாமியும் முன் வைத்தார். இவர்களின் கோரிக்கை 60 வருடங்களுக்குப்பின் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் நிறைவேறியது.

 

06.02.1925 தேதி சட்டப்பேரவையில் பேசிய இரட்டைமலை சீனிவாசன், தெலுங்கு மொழி தாழ்த்தப்பட்டோரான மாலா, மாதிகாவை ஆதி ஆந்திரர் என அழைக்கும்போது, புலையர், தீயர்களை ஏன் மலையாளத் திராவிடர் என அழைக்கக்கூடாது எனக் கேள்வி எழுப்பினார். இரட்டைமலை சீனிவாசன் ஒவ்வோர் வருடமும் தவறாமல் பட்ஜெட் உரையின் மீது உரையாற்றுவது வழக்கம். அவரது முதல் பட்ஜெட் உரை 06.02.1925 அன்று தொடங்கியது. ஆதித் திராவிட மக்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு, கல்வி வளர்ச்சி, சுகாதார வளர்ச்சி, பஞ்சமி நில ஒதுக்கீடு போன்றவற்றை வற்புறுத்தினார். இவர் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே பேசினார். எம். சி. மதுரை பிள்ளை, சாமி சகஜானந்தம் ஆகிய இருவர் மட்டும் சட்டப்பேரவையில் தமிழிலேயே பேசினார்கள். ஆதித்திராவிடர் முதல் மாநில மாநாடு 29.01.1928-இல் பச்சையப்பன் கல்லூரியில் இரட்டைமலை சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இம் மாநாட்டின் முக்கிய நோக்கம், வரவிருக்கின்ற சைமன் குழுவிற்கு அறிக்கை அளிப்பதற்கான குழுவினை அமைப்பதும், ஆதித் திராவிடர்களின் தேவைகளை வலியுறுத்துவதும் ஆகும்.



 

தனித் தொகுதி வேண்டும் 

 

ஆதித் திராவிடர்களுக்குத் தனித் தொகுதி வேண்டும் என்றும், 21 வயது அடைந்த அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்படவேண்டும் என்றும், கல்வி, வேலை வாய்ப்புகளில் உரிய பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும் என்றும், தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி உள்பட அனைத்துக் கல்வியும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

சமரசமின்றி இறுதிவரை


1935-இல் அம்பேத்கர் மதம் மாற விரும்பியபோது, இரட்டைமலை சீனிவாசன், “நாம்தான் இந்து மதத்தில் இல்லையே, அவர்ணஸ்தர் (வர்ணம் அற்றவர்கள்) ஆயிற்றே. நாம் இந்துவாக இருந்தால்தானே மதம் மாறவேண்டும்” என்று தந்தி மூலமாகத் தன் கருத்தை அம்பேத்கருக்குத் தெரிவித்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் மேன்மைக்காகப் பாடுபட்ட இரட்டைமலை சீனிவாசன் 18.9.1945 அன்று இயற்கை எய்தினார். அவருடைய பிறந்த நாளை அரசு விழாவாகவும் கொண்டாடி வருகின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர்களின் உரிமைக்காகவும் சமரசமின்றி இறுதிவரை போராடிய வரலாற்றால் கண்டறியப்படாத இரட்டைமலை சீனிவாசன் புகழ் எனும் வரலாற்றிலிருந்து மறையாது.