1929-ஆம் ஆண்டு ஜாக்ஸன் மார்க்கெட் என்ற பெயரில் காய்கறி சந்தை உருவாக்கப்பட்டது. இதன் பிறகு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஜாக்ஸன் மார்க்கெட் நேரு மார்க்கெட் என பெயர் ஆனது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண்.3  செங்கழுநீரோடை வீதியில் 40 கடைகள் கொண்டு, இயங்கி வந்த ஜவஹர்லால் நேரு மார்க்கெட் தற்போது பொதுமக்கள் வந்து செல்லவும் வாகனங்கள் நிறுத்தவும் போதிய இடவசதில்லாமல் காணப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 

கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம்

 

போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பொதுமக்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப கடைகளை அதிகப்படுத்தவும் புதிதாக மார்க்கெட் கட்ட திட்டமிடப்பட்டது.  இதனைத் தொடர்ந்து கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நேரு மார்க்கெட்டை மேம்படுத்த 4.60 கோடி மதிப்பிலான நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது, புதியதாக அமைக்கப்படும் கட்டிடத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் கழிவறை வசதி, குடிநீர் வசதி, கண்காணிப்பு கேமரா, உயர்மின் கோபுர விளக்குகள் மற்றும் இருச்சக்கர வாகன நிறுத்தம், ஆகிய நவீன வசதிகள் கொண்டு அமைப்பதற்கும் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2022-23 கீழ் ரூ.460.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும் கட்டிடத்தை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டி பணியினை துவக்கி வைத்தார்.

 

தாட்டித்தோப்பு 

 

பின்னர், காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 27ல் அமைந்துள்ள முருகன் குடியிருப்பு மற்றும் தாட்டித்தோப்பு பகுதியில் சுமார் 40 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட தரைப்பாலம் கடந்த வடகிழக்கு பருவமழையின் போது சேதமடைந்து பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இப்பாலத்தின் வழியாக முருகன் குடியிருப்பு, வரதராஜன் குடியிருப்பு, தாட்டி தோப்பு, பல்லவர் குடியிருப்பு,  அண்ணா நகர், கிருஷ்ணா நகர், செல்லியம்மன் நகர், எர்வாய், குளாம்பாக்கம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் சுமார் 1500 குடியிருப்புகளில் வசிக்கும் 6000 பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இப்பாலம் சேதமடைந்துள்ளதால் சுமார் 2 கி.மீ தூரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள பள்ளி குழந்தைகள், கல்லூரி, மாணவ மாணவியர்கள் மற்றும் பணிக்கு செல்லும் மகளிர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
  

 

திடக்கழிவு மேலாண்மை

 

மேற்படி அடிப்படை மற்றும் உள்கட்டமைப்பு திட்ட நிதி 2022-23 கீழ்  ரூ.2.30கோடி மதிப்பீட்டில் முருகன் குடியிருப்பு மற்றும் தாட்டித்தோப்பு பகுதி மக்களுக்கு பயன்படும் வகையில் வேகவதி ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்தல் பணியினை குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்  அடிக்கல் நாட்டி பணியினை‌ துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து  திடக்கழிவு மேலாண்மை திட்டம் 2022-23 கீழ் ரூ.16.60கோடி மதிப்பீட்டில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வெளிக்கொணர்வு முறையில் பணியாளர்கள் மற்றும் வாகனங்களை  குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் அறிமுகப்படுத்தி கொடியசைத்து, துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன் மேயர் மகாலட்சுமி யுவராஜ்,துணை மேயர் குமரகுருநாதன்,மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன்,ஆணையர் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 



ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.