தமிழகத்தை உலுக்கிய நிதி நிறுவன மோசடிகள்
ஆருத்ரா, ஹிஜாவு, ஐஎஃப்எஸ், எல்பின் உள்ளிட்ட 8 பெரிய நிதி நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் 2.91 லட்சத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.14,168 கோடி வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. மோசடி நிதி நிறுவன நிர்வாகிகள், முகவர்கள் உட்பட 45 பேரைக் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இதில் ஆருத்ரா ( aarudhra gold trading company ) என்ற நிதி நிறுவனம், 1,09,285 முதலீட்டாளர்களிடமிருந்து 2,438 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது. இந்த வழக்கில் கடந்த ஒருமாதத்தில் மாலதி, மைக்கேல் ராஜ், ஹரிஷ், ராஜ செந்தாமரை, சந்திர கண்ணன் ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த மோசடியில் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் மற்றும் தமிழக பா.ஜ.கவின் ஓ.பி.சி. பிரிவு துணை தலைவராக இருக்கும் ஆர்.கே.சுரேசுக்கும், பா.ஜ.கவின் நிர்வாகி ஹரீஷ் ஆகியோருக்கும் தொடர்பிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பணத்தை திருப்பிக் கொடுத்த நடவடிக்கை
ஆருத்ராவில் முக்கிய ஏஜென்ட்களாக பணியாற்றியவர்களின் பட்டியலை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், சரி பார்த்து சுமார் 2000 பேர் வரை ஏஜெண்டர்களாக பணியாற்றி வந்தது தெரிய வந்துள்ளது. இவற்றில் 200 ஏஜெண்டுகள் பல கோடி ரூபாய்களை முதலீடுகளாக பெற்று, ஆருத்ரா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ததும் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.முதல்கட் டமாக அதிக பணம் வசூலித்த 200 பேரை கண்டறிந்து தேவை ஏற்பட்டால் அவர்களை கைது செய்யவும், அதிக பணம் வசூலித்த 200 முகவர்களிடம் 30% பணத்தை திரும்ப பெற வாய்ப்பு உள்ளதாகவும் குற்றப்பிரிவு போலீஸ் தெரிவித்துள்ளது.
குற்றப்பத்திரிகை தாக்கல்
இந்த வழக்கில் டான்பிட் நீதிமன்றம் எனப்படும் தமிழ்நாட்டு முதலீட்டார்கள் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில், பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை தரப்பில், அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் டி.பாபு சில நாட்களுக்கு முன்பு குற்றப்பத்திரிகை ஒன்றை தாக்கல் செய்துள்ளார். மேலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் விசாரணை நடைபெறும் இடையில், தொடர்ந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .
சொத்துக்களை ஏலம் விட நடவடிக்கை
ஆருத்ரா நிதி நிறுவனத்திற்கு சொந்தமான 127 அசையா சொத்துக்களை சென்னை பொருளாதார, குற்றப்பிரிவு போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இதன் மதிப்பு 23.34 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அரசு மதிப்பீட்டின்படி 23.34 கோடி என்றாலும், இதன் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட 90 கோடி ரூபாய் வரும் என கூறப்படுகிறது. இதில் இயக்குனரான ராஜசேகரின் 11 இடங்களில் சொத்துக்களை வாங்கி இருப்பதும் அதன் மடிப்பு 8 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. அனைத்து அசையா சொத்துக்களையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் வசம் வந்துள்ளது. தொடர்ந்து இந்த சொத்துக்கள் நீதிமன்ற அனுமதியுடன் முடக்கப்பட்டு, அவை ஏலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏலம் விடப்பட்டு கிடைக்கும் பணத்தின் மூலம், முதலீட்டாளர்களுக்கு பணம் திரும்ப கொடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச போலீசை நாடும், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்
ஆருத்ரா நிதி நிறுவனத்தின் முக்கிய இயக்குனராக இருந்து வந்த ராஜசேகர் மற்றும் மற்றொரு இயக்குனரான ராஜசேகரின் மனைவி உஷா ஆகிய இருவரும் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுள்ளனர். தற்சமயம் இருவரும் எந்த நாட்டில் இருக்கிறார்கள் என்பது குறித்த தகவல்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சேகரித்து இருப்பதாகவும், அவர்களை கைது செய்ய சர்வதேச போலீசாரின் உதவியை நாடி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.