சென்னை கே.கே.நகரில் உள்ள ராணி அண்ணாநகர் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் சினிமா படப்பிடிப்புகளை எடுக்க குடிசை மாற்று வாரியம் மூலம் தடை வாங்கி இருந்த நிலையில் செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அனுமதி கொடுத்துள்ளதால் பொதுமக்கள் கடும் வேதனைக்குள்ளாகி உள்ளனர்.



ராணி அண்ணாநகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு தமிழ் சினிமா இயக்குநர்களுக்கு மிகவும் பரிட்சையமான இடமாக உள்ளது. ஹவுசிங் போர்டு மக்கள் பகுதியில் வாழும் காட்சிகளை பதிவு செய்ய வேண்டும் எனில் ராணி அண்ணாநகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் படப்பிடிப்பை நடத்த திரைத்துறையினர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். திரைப்படத்துறையின் தலைமையிடமாக கருதப்படும் கோடம்பாக்கம், வடபழனிக்கு அருகிலேயே இக்குடியிருப்பு இருப்பதாலும் துணைநடிகர்கள், ஒப்பனைக்கலைஞர்கள், சண்டை பயிற்சியாளர்கள் உள்ளிட்டோரின் வீடுகளும் இப்பகுதிக்கு அருகிலேயே இருப்பதாலும்  திரைப்பட கருவிகளை எளிதில் எடுத்துச் செல்லவும் வசதியாக இருப்பதாலும் திரைத்துறையினர் ராணி அண்ணாநகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை தேர்வு செய்ய முக்கிய காரணமாக உள்ளது. 



இயக்குநர் சங்கரின் முதல்வன், பாய்ஸ், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய காக்க உள்ளிட்ட திரைப்படங்களில் வரும் சில காட்சிகள் இப்பகுதியில்தான் படமாக்கப்பட்டன. இந்த நிலையில், படம் எடுக்கிறோம் என்கின்ற பெயரில் திரைத்துறையினர் இப்பகுதிக்கு வரும் தண்ணீர் லாரிகளுக்கு இடையூறு செய்வதும், பொதுமக்கள் சாலையில் நடக்க கட்டுப்பாடுகள் விதிப்பதும் தொடர்ந்ததால், அப்பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் படப்பிடிப்புகளை நடத்துவதற்கு பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். நடிகர் தனுஷின் சுள்ளான் படப்பிடிப்பின்போது பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் அப்பகுதியில் படப்பிடிப்பு நடத்த கடந்த 2005ஆம் ஆண்டு குடிசை மாற்று வாரியம் தடை விதித்தது. 



தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் இந்த தடைக்கு பிறகு ராணி அண்ணாநகர் குடிசை மாற்று குடியிருப்பில் கடந்த 17 ஆண்டுகளாக படப்பிடிப்புகள் ஏதும் நடத்தப்படாத நிலையில், தற்போது ஜூலை 26ஆம் தேதியான நாளைய தினம் இப்பகுதியில் படப்பிடிப்புக்கு அனுமதி பெற்று விட்டோம் என ஒரு சினிமா தயாரிப்பு நிறுவனம் அறிவித்தற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 



சம்பந்தப்பட்ட சினிமா பட கம்பெனியிடம்  இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் விளக்கம் கேட்டபோது, செய்தி மற்றும் விளம்பரத்துறையின் அனுமதியை தாங்கள் பெற்றுள்ளதாக தெரிவித்தூள்ளனர். இப்பகுதியில் சினிமா படப்பிடிப்புகளை நடத்த தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் தடை விதித்துள்ளதாக கூறும் ராணி அண்ணாநகர் பகுதி மக்கள் குடிசை மாற்று வாரியத்திற்கு தெரிவிக்காமலேயே செய்தி மற்றும் விளம்பரத்துறையிடம் அனுமதி பெற்று வந்து சினிமா படப்பிடிப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இப்படப்பிடிப்புக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுப்பதுடன் இந்த விவகாரம் தொடர்பாக கே.கே.நகர் R7 காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.