சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள கோவிட் தடுப்பூசி மையங்களில் நெரிசல் இல்லாமல் பொது மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில், இணையதளத்தில் முன்பதிவு செய்யும் வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சியால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் அனைத்தும் எல்லோரும் எளிதில் பயன்படுத்தும் வகையில் டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. மாநகராட்சியில் புதிய யுக்திகளைக் கையாண்டு பொதுமக்களுக்குச் சிறப்பான சேவையை வழங்க சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் சென்னை இன்னோவேஷன் ஹப் (Chennai Innovation Hub) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் கோவிட் தடுப்பூசி மையங்களில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்க்கும் வகையில் CHUB சார்பில் https://www.chennaicorporation.gov.in/gcc/covid details/ என்ற புதிய இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இணையதள வசதியின் மூலம் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டிய தங்கள் பகுதிக்குட்பட்ட தடுப்பூசி மையத்தினைத் தேர்வு செய்து அதற்கான நேரத்தையும் முன்பதிவு செய்துகொள்ளலாம். மேலும், 044-4612 2300 என்ற தொலைபேசி எண்ணிலும், 94999 33544 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலும் தொடர்புகொண்டு தடுப்பூசி மையங்கள் மற்றும் அதற்கான நேரத்தை முன்பதிவு செய்துகொள்ளலாம். இதன் மூலம் பொதுமக்கள் தடுப்பூசி மையங்களுக்குச் சென்று நீண்ட நேரம் காத்திருப்பதையும். அதனால் ஏற்படும் கூட்ட நெரிசலையும் தவிர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த இணையதளம் மற்றும் தொலைபேசி எண்கள் வாயிலாகப் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் மையம் மற்றும் நேரம் ஆகியவற்றை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். அரசின் இணையதளத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவரின் விவரங்கள் தடுப்பூசி மையத்திலுள்ள சம்பந்தப்பட்ட அலுவலரின் வாயிலாக மட்டுமே பதிவேற்றம் செய்யப்படும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று இரண்டாவது அலை கடந்த ஏப்ரல் மாதம் முதல் மிகவும் தீவிரம் அடைந்தது. அந்த பரவல் தற்போது ஓரளவு குறைய தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில் அனைத்து மாநிலங்களும் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. பல இடங்களில் தடுப்பூசி தொடர்பான தவறான புரிதல் காரணமாக முதலில் மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள தயக்கம் காட்டி வந்தனர். ஆனால் தற்போது அந்த நிலை மாற தொடங்கி பலர் தடுப்பூசி செலுத்த ஆர்வமுடன் வருகின்றனர். இதனால், சென்னை மாநகரில் உள்ள பொதுமக்கள் இந்த இணைய வசதியை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்காக பதிவு செய்யலாம்.