தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம்
கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் விஜய் கொடி மற்றும் இயக்கத்தின் ஆதரவுடன் முதன்முறையாக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கட்சி சார்பு இல்லாத ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 169 இடங்களில் போட்டியிட்டனர். அதில் போட்டியின்றி 13 பேர், போட்டியிட்டு 102 பேர் என மொத்தம் 115 பேர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற பிரதிநிதிகளை நடிகர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மக்கள் பணியை திறம்பட செயல்பட வேண்டும் என விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வெற்றி பெற்ற அனைவருக்கும் விஜய் வாழ்த்துக்களை தெரிவித்தார் . வெற்றி அடைந்தவர்களை மட்டுமில்லாமல் தோல்வி பெற்றோர்களிடமும் நடிகர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.
நகர்புற தேர்தல்
தற்போது தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இந்நிலையில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலைத் தொடர்ந்து தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிட உள்ளனர்.
ஆட்டோ சின்னம்
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்திற்கு பொது சின்னமான ஆட்டோ சின்னத்தை ஒதுக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை மாநில தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் ஆட்டோ சின்னத்தை வழங்க முடியாது. இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தால் மட்டுமே பொது சின்னம் வழங்க முடியும் என தெரிவித்துள்ளது. இதனையடுத்து, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அந்த வழக்கின் அடிப்படையில் பொது சின்னத்தை பெறுவதற்கான முயற்சிகளை விஜய் மக்கள் இயக்கம் மேற்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
ஆட்டோ சென்டிமென்ட்
ஆட்டோ என்றாலே தமிழக பொதுமக்களுக்கு ரஜினி பாட்ஷா திரைப்படத்தில் ஆட்டோ ஓட்டும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். நான் "ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்" என்ற பாடலும் பட்டி தொட்டி எங்கும் ஃபேமஸ். ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக முடிவு செய்தபோது அவருடைய கட்சி சின்னமாக பாபா முத்திரை அல்லது ஆட்டோ சின்னத்தை பயன்படுத்தலாம் என முடிவு செய்திருந்தார்.
இப்பொழுது நடிகர் விஜயும் ஆட்டோவை சின்னமாக விரும்புவதற்கு காரணம் ஏன் என விஜய் மக்கள் இயக்க வட்டாரத்தில் விசாரித்தோம், விஜய் வேட்டைக்காரன் படத்தில் ஆட்டோ ஓட்டிக்கொண்டே போலீஸ் அதிகாரியாக வரவேண்டும் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த ஆட்டோவில் " வாழு .. வாழவிடு " என வசனம் இடம் பெற்றிருக்கும், அந்த படம் வெளியானதை தொடர்ந்து பல ஆட்டோக்களில் இந்த வசனம் தமிழகம் முழுவதும் எழுதப்பட்டது.
இப்போதும் நாம் பல ஆட்டோக்களில் இந்த வசனங்களை பார்க்க முடியும். விஜய் ஆட்டோ டிரைவராக நடித்தது அப்போது இருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. தற்போது ரஜினிகாந்தும் கட்சி துவங்க பட போவதில்லை என உறுதியாக கூறியுள்ளார், இதன் அடிப்படையில் சென்டிமென்டாக விஜய் ஆட்டோ சின்னம் வேண்டும் என முடிவு செய்ததாக கூறுகின்றனர்.