ராமாபுரம் அருகே மெட்ரோ கட்டுமானப் பணிகளின் போது மேம்பால பில்லர் சாய்ந்து ஏற்பட்ட விபத்தில் போக்குவரத்து ஊழியர்கள் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.


மெட்ரோ கட்டுமானப் பணி


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. இதற்காக நகரின் பல பகுதிகளிலும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சில இடங்களில் ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டும், சில இடங்களில் இரவு மட்டுமே வாகனங்கள் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில் நேற்று (செப்.27) அதிகாலையில் அரசு பேருந்து பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மற்றும் லாரி மீது மேம்பால பில்லர் சாய்ந்து ஏற்பட்ட விபத்தில் போக்குவரத்து ஊழியர்கள் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.


உடைந்த க்ரேன், சாய்ந்த பில்லர்


குன்றத்தூரில் இருந்து TN01 N5450 என்ற அரசு பேருந்து 8 அரசு பேருந்து ஊழியர்களை ஏற்றிக் கொண்டு மாநகரப் பேருந்து ஒன்று ஆலந்தூர் பணிமனைக்குச் சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தை அய்யாத்துரை (52) என்ற ஓட்டுநர் ஓட்டிச் சென்றுள்ளது.


தொடர்ந்து பூந்தமல்லி டிரங்க் சாலை, ராமாபுரம் அருகே பஸ் சென்று கொண்டிருந்தபோது, மெட்ரோ ரயில் பணிக்காக பில்லர்கள் அமைப்பதற்காக 30 அடி நீளம் கட்டப்பட்ட கம்பிகளை ராட்சத கிரேன் உதவியுடன் தூக்கி நிறுத்தும் பணி நடந்து கொண்டிருந்தது.


அப்போது திடீரென க்ரேனின் ஒரு பகுதி உடைந்து 30 அடி நீளம் கட்டப்பட்ட கம்பிகளுடன்  பேருந்து மீது விழுந்தது.  இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனர் அய்யாதுரை (52), பேருந்து நடத்துனர் பூபாலன் (45), லாரி டிரைவர் ரப்சித் குமார் ஆகியோருக்கு கை கால்களில் படுகாயம் ஏற்பட்டது.


தொடர்ந்து ஊழியர்கள் பேருந்திலிருந்து அலறியடித்து வெளியேறிய நிலையில், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.


இந்தச் சம்பவம் தொடர்பாக பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சேதமடைந்த பேருந்து மீட்கப்பட்டு பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், பிற ஊழியர்கள் மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு மெட்ரோ ரயில் பணி திட்ட அதிகாரிகளும் சென்று விசாரித்து வருகின்றனர்.


போக்குவரத்து மாற்றம்


சென்னை, பூந்தமல்லி டிரங்க் சாலையில் பூந்தமல்லி பேருந்து நிலையம் முதல் கரையான்சாவடி வரை நடைபெறும் மெட்ரோ ரயில் திட்ட பணிக்காக போக்குவரத்து முறையில் பின்வரும் தற்காலிக போக்குவரத்து மாற்றம் 4-5-2022 முதல் 3-9-2022 வரையில் பகல் மற்றும் இரவு முழுவதும் நடைமுறையில் இருந்தது.

 

இந்நிலையில் முன்னதாக இந்தப் போக்குவரத்து மாற்றம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆவடி ஆணையரங்கம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.