சென்னை மெட்ரோ ரயிலில் டோக்கனுக்குப் பதிலாக இனி கியூ.ஆர் கோடுடன் கூடிய காகிதப்பயணச்சீட்டு அடுத்த சில மாதங்களில் அறிமுகமாகும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.


இந்தியாவில் மெட்ரோ நகரங்களில் எல்லாம் மக்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டு வெற்றிக்கரமாக செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் தான் மிகுந்த போக்குவரத்து நெரிசல் கொண்ட சென்னை மாநகரிலும் மெட்ரோ ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டு தற்போது வெற்றிக்கரமாக இயங்கிவருகிறது. இதன் உதவியோடு அரை மணி நேரத்திலேயே நாம் எங்கு செல்லவிருக்கிறோமோ? அங்கு எளிதில் செல்லக்கூடிய வசதிகள் உள்ளது. அதிக பயணக்கட்டணம் என்றாலும் மக்கள் எந்தவித ப்ரசர் இன்றி தங்களது பயணத்தை போக்குவரத்து நெரிசல் இல்லாமல் மேற்கொள்ளமுடிகிறது. குறிப்பாக மெட்ரோ உதவியோடு விமானநிலையத்திலிருந்து கோயம்பேட்டிற்கு வெறும் 30 நிமிடங்களில் வந்துவிடமுடியும்.



 தற்போது இரு வழித்தடங்களில் இயக்கப்படும் இந்த ரயில்சேவையை மாற்றுத்திறனாளிகள் முதல் அனைத்துப்பயணிகளும் பயணிக்கும் வகையில் அனைத்து சேவைகளும் மெட்ரோவில் இடம் பெற்றுள்ளது. ஆனால் இதில் மற்ற ரயில்களைப்போன்று டிக்கெட்டுகள் மூலம் பயணிக்க முடியாது. அதற்கு மாற்றாக மெட்ரோ ரயிலில் எந்த நிலையத்தில் இருந்து ஏறுகிறோமோ, அங்கு டோக்கன் பெற்று அதை சென்சார் பொருந்திய நுழைவு வாயிலில் காண்பித்துச் செல்ல வேண்டும். அதேப்போன்று தான்,  ரயிலில்  இருந்து இறங்கும் போதும் சென்சாரில் அந்த டோக்கனைப்போட்டால் தான் நுழைவு வாயில் திறக்கும். அதன் பின்னர் பயணிகள் வெளியேற முடியும்.


இதுப்போன்ற நடைமுறைகளைத் தான் மெட்ரோ நிர்வாகம் இதுவரை அமல்படுத்தி வந்த நிலையில் தற்போது கொரோனா  கட்டுப்பாடு காரணமாக டோக்கன்களை ஒவ்வொரு முறையும் கிருமிநாசினிக் கொண்டு சுத்தப்படுத்த வேண்டியுள்ளது. இதனால் மிகுந்த சிரமத்தை சந்திக்க வேண்டி இருப்பதால் மெட்ரோ ரயிலில் தொடுதல் இல்லாத பயணத்துக்கான வழிமுறையை மெட்ரோ நிர்வாகம் அறிமுகம் செய்யவுள்ளது. இதற்காக அச்சிடப்பட்ட கியூ ஆர் குயியீடு பயணச்சீட்டுகளின் பயன்படுத்தும் முறையை நடைமுறைப்படுத்தவுள்ளது. இதன் மூலம் இனி வரும் காலங்களில் மெட்ரோவில் பயணம் செய்யும் ரயில் பயணிகள் விமானநிலையங்களில் போர்டிங் பாஸைப்போன்று காகித பயணச்சீட்டை ஒரு பொத்தானை அழுத்தினால் வாங்க முடியும்.  





இதன் மூலம் இனி எந்த கொரோனா அச்சமின்றி பயணிகள் எளிதாகப் பயணிக்க முடியும். இந்த டிக்கெட்டுகளை பயணிகள் கவுண்டர்களிலும், இயந்திரங்கள் வாயிலாகவும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும், இதற்காக 40 மெட்ரோ நிலையங்களில் இயந்திரங்கள் அமைக்கப்படவுள்ளதாக மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நடைமுறை இன்னும் சில மாதங்களில் தொடங்கும் எனவும் அறிவித்துள்ளது.