கோவில் நகரமாக இருக்கும் காஞ்சிபுரத்தில் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கமாக உள்ளது. அதிகளவு வெளியூர் பயணிகள் வந்து செல்லும் பகுதியாக இருப்பதால், சாலை வசதிகள் மிகவும் முக்கியமானதாக காஞ்சிபுரத்தில் கருதப்படுகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இருந்து பிற பகுதிகளுக்கு செல்வதற்கு முக்கிய சாலையாக இருக்கும், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் செவிலிமேடு அருகே பாலாறு அமைந்துள்ளது. இந்த பாலாற்றின் குறுக்கே கடந்த 13 வருடங்களுக்கு முன்பு உயர்மட்ட பாலம் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்பட்டது.
இந்த பாலம் செய்யாறு, வந்தவாசி, திண்டிவனம் ,பாண்டிச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு மிக முக்கிய சாலையாக உள்ளது. எப்பொழுதும் காஞ்சிபுரம் வந்தவாசி பிரதான சாலை ஆனது பரபரப்பாக இயங்கி வரும் நிலையில் , பால தூண்களின் இணைப்பு பகுதிகள் மிகவும் சேதம் அடைந்து வருவதாக வாகன ஓட்டிகள் தொடர் புகார் தெரிவித்து வந்தனர். அதேபோல் பாலம் மிக மோசமாக இருந்து வந்ததால் அடிக்கடி விபத்து நடைபெறுவதாக வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டை முன்வைத்து வந்தனர். வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் தொடர் புகாரியில் எதிரொலியால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர் .
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி திடீரென பாலம் இணைப்பு பகுதியில், அதிக விரிசல் காணப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து சம்பவ இடத்தினை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம் சுதாகர் ஆகியோர் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர். பாலத்தில் இணைப்பு பகுதி மிகவும் சேதம் அடைந்ததை கண்ட, மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதற்கான நடவடிக்கை எடுக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவை பிறப்பித்து இருந்தார் . இதனை அடுத்து அந்த பகுதியில், தற்காலிகமாக சரி செய்யப்பட்டது.
ஆனால் தற்போது , மீண்டும் அந்த பகுதியில் இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் வண்ணம் சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அச்சத்துடனே அப்பகுதியை கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏதேனும் உயிரிழப்பு ஏற்பட்ட பின்தான் இந்த பகுதி நீக்கும் பணியை நெடுஞ்சாலை துறை துவக்குமா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இது குறித்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, பிரச்சனையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.
உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா?
என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.