வங்கக் கடலில் புயல் சின்னம் மையம் கொண்டுள்ள நிலையில்,  நாளை (டிச.08) முதல் அடுத்த மூன்று நாள்களுக்கு சென்னை மாநகரில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.


அதன்படி, கடந்த மழையின்போது மழைநீர் அதிகம் தேங்கிய இடங்களில் மோட்டார்களை தயார் நிலையில், வைத்திருக்க வேண்டும் என்றும் தேவைப்படும் இடங்களில் கூடுதல் மோட்டார்களை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்றும், நாளை முதல் 3 நாள்களுக்கு 24 மணி நேரமும் மாநகராட்சி களப்பணியாளர்கள் பணியில் இருக்க வேண்டும் என்றும் மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. மேலும்,



  • 24 மணி நேர பணி முறையில் சுழற்சி முறையில் பணியாளர்களுக்கான வேலை நேரம் வழங்க வேண்டும்.

  • அனைத்து வார்டுகளிலும் மீட்பு பணிக்கு 10 தற்காலிகத் தொழிலாளர்கள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

  • மண்டல வாரியாக உள்ள அனைத்து கட்டுப்பாட்டு அறைகளும் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும்.

  • வலுவற்ற நிலையில் உள்ள மரங்கள், மரக்கிளைகள் அகற்றப்பட வேண்டும்.

  • மண்டல அளவிலான அலுவலர்கள் மரங்கள் அகற்றப்படுவதை ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும்.

  • மர அறுவை எந்திரம், சக்திமான் எந்திரம் போன்ற அனைத்து எந்திரங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

  • அனைத்து மழைநீர் வடிகால்களிலும் மழை நீர் தங்கு தடையின்றி செல்வதை இன்று மாலைக்குள் அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்” எனவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. 


மழை எச்சரிக்கை: 


டிசம்பர் 8 ஆம் தேதி தமிழகத்தின் கடலோரப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மற்றும் தென் கடலோர ஆந்திரப் ஒட்டியுள்ள பகுதிகளில் கன முதல் மிக கனமழையுடன் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.


டிசம்பர் 9 அன்று தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும், ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் மற்றும் வட கடலோர தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல, தெற்கு கடலோர ஆந்திராவை ஒட்டிய பகுதியில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 


10 ஆம் தேதி வட தமிழகம் மற்றும் ராயலசீமா மற்றும் தெற்கு ஆந்திரப் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையுடன் பல இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.


மீனவர்களுக்கான எச்சரிக்கை:  


அந்தமான் கடல் பகுதிகள் :  சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்தில்  06.12.2022   அன்று  வீசக்கூடும்.


தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்: சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்தில் 06.12.2022   அன்று வீசக்கூடும். காற்றின் வேகம் படிப்படியாக  உயர்ந்து 07.12.2022   அன்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 70  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து   08.12.2022  அன்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.


தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள்: சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60  கிலோ மீட்டர் வேகத்தில் 06.12.2022   அன்று வீசக்கூடும்; காற்றின் வேகம் படிப்படியாக  உயர்ந்து 07.12.2022   அன்று காலை  மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 70  கிலோ மீட்டர் வேகத்திலும்,  08.12.2022, 09.12.2022 தேதிகளில்  மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 90  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு  காற்றின் வேகம் படிப்படியாக  குறையக்கூடும்.