உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு தீவிரமாக பரவி வரும் சூழலில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், தமிழ்நாட்டிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1,03,607 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1489 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 682 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 8 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 611 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர்.
அதேபோல், புதிய வகை ஒமிக்ரான் தொற்று 121 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், கொரோனா பரவல் மற்றும் ஒமிக்ரான் தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக இன்று முதல் சென்னை கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில், ஒமிக்ரான் பரவல் காரணமாக மறுஉத்தரவு வரும் வரை சென்னையில் உள்ள கடற்கரை மணல்பரப்புகளில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் நபர்கள் நடைபாதையில் பயிற்சி மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் கொரோனா பரவல் ஆலோசனை கூட்டத்தில் இந்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல், 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்