கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பியது. 3 தினங்களுக்கு முன்பு செம்பரம்பாக்கம் ஏரியில் முதற்கட்டமாக 500 கனஅடி நீரும், அடுத்தபடியாக ஆயிரம் கனஅடி நீர், பின்னர் 2000 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் நேற்று முதல் மழை சற்று குறைந்ததால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றுள்ளது. இருப்பினும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தொடர்ந்து 2 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இன்று 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு அதிக அளவு மழை பெய்யக் கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக, தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது செம்பரம்பாக்கம் ஏரியை 20 அடியில் கண்காணிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதன் பிறகு தொடர்ந்து ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தாலும் 23 அடி வரை தேக்கி வைத்து அதன் பிறகு படிப்படியாக உபரி நீரை திறந்துவிட முடிவு செய்திருப்பதாகவும், ஏரியில் இருந்து சீராக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 2015ஆம் ஆண்டு அடையாறு ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு போல் மீண்டும் நிகழாதவாறு செம்பரம்பாக்கம் ஏரி தீவிர கண்காணிப்பில் உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை வருவதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் திறந்துவிடப்பட்டுள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்தான் செம்பரபாக்கம் சுற்றுவட்டார பகுதியில் செம்பரம்பாக்கம் ஏரியில் பிடிக்கும் மீன்களின் விற்பனை அதிகரித்துள்ளது.
தற்போது 2,000 கன அடி நீர் உபரி நீராக திறந்து விடப்பட்டுள்ள நிலையில் கால்வாய்களின் வழியாக உபரி நீரானது ஆர்ப்பரித்து செல்கிறது. இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் கால்வாய்களில், செல்லும் நீர்களில் வலைகளை விரித்து அதிக அளவில் மீன்களை பிடித்து வருகின்றனர். தற்போது பெரிய அளவிலான மீன்கள் அதிக அளவில் கிடைப்பதால் மீனவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைகின்றனர். அவ்வாறு கிடைக்கும் கட்லா, கெண்டை, கெளுத்தி, ஜிலேபி, ஏரி வஞ்சிரம், தேளி உள்ளிட்ட பெரிய, பெரிய அளவிலான மீன்களை குன்றத்தூர் - ஸ்ரீபெரும்புதூர் சாலை, காவனூர் கிராமம் அருகே சாலையோரம் கடைகள் அமைத்து மீன்களை விற்று வருகின்றனர்.
தொடர் மழை காரணமாக தமிழக அரசு விடுமுறை அளித்து இருப்பதால் இறைச்சி கடைகளுக்கு பொது மக்கள் படை எடுக்காமல், உயிருடன் கிடைக்கும் ஏரி மீன்களை அதிக அளவில் குடும்பத்துடன் வந்து ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். மேலும் இங்கு விற்கப்படும் மீன்கள் விலை மிகவும் குறைந்து காணப்படுவதால், பொதுமக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். கடல் மீன்களை காட்டிலும் தற்போது ஏரி மீன்கள் குறைந்த விலைக்கும் உயிருடனும் கிடைப்பதால் பொதுமக்கள் அதனை வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேவேளையில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென அரசு அறிவுறுத்திய நிலையில் பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாமென தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது.