சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்த அதி கன மழை காரணமாக பெரும்பாலான இடங்களில் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. டெல்டா பகுதிகளில் வயல்களில் மழைநீர் சூழ்ந்ததால் பயிர்கள் மூழ்கின. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  சென்னை உள்ளிட்ட இடங்களில் அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. பொதுமக்கள் இன்று இரவிலிருந்து நாளை வரை அத்தியாவசியத் தேவையின்றி வெளியே வர வேண்டாம், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

 



 

இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், மத்திய மற்றும் தெற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையானது மேலும் வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் தெரிவித்துள்ளது. தாழ்வு மண்டலம் நாளை மாமல்லபுரம் - ஸ்ரீஹரிகோட்டா இடையில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நாளை சென்னை உள்ளிட்ட இடங்களில் அதி கனமழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 



அதிகளவு மழை பெய்ததால் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் . சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியில் பெருமழை வெள்ளம் காரணமாக தண்ணீர் சூழும் அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்குவதற்காக தமிழக அரசு நிவாரண முகாமை பெருங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏற்படுத்தியுள்ள நிலையில், அங்கு பாதிப்புக்குள்ளான மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாமில் சுமார் 50- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பிற்காக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து உதவி புரிந்து வருகின்றனர்.



இந்நிலையில், துரைப்பாக்கம் காவல் நிலைய போலீசார் வழக்கமான ரோந்து பணியின்போது அந்த நிவாரண முகாமை பார்வையிட்டு அங்கிருந்த மக்களின் தேவைகளை கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். இதையடுத்து முகாமில் உள்ள மோனிகா என்ற ஒருவயது பெண் குழந்தைக்கு இன்று பிறந்தநாள் என்ற தகவல் தெரியவந்தது. இதனையடுத்து, துரைப்பாக்கம் காவல் நிலையத்தை சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஒன்றிணைந்து அந்த ஒருவயது பெண் குழந்தைக்கு புத்தாடை, சாக்லேட் பலூன், கேக் மற்றும் பரிசுப் பொருட்களை வாங்கிக் கொடுத்து அந்த முகாமில் உள்ள நபர்களோடு சேர்த்து குழந்தையின் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடினர். இந்த சம்பவம் அந்த முகாமில் தங்கியிருப்பவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.