ஒமைக்ரான் பரவல் தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில், தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டு நேற்று காவல்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு சார்பில் விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு மக்கள் ஒன்று கூடுவதை தடுக்கும் விதமாக டிசம்பர் 31ம் தேதி அன்று இரவு தமிழ்நாட்டிலுள்ள கடற்கரைகளில் பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை என தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் அனைவரும் வீடுகளிலேயே அவரவர் குடும்பத்தினருடன் புத்தாண்டினை மகிழ்ச்சியுடன், மற்றவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.



 

மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31ம் தேதி இரவு அன்று, காவல்துறையினரின் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மது அருந்திய ஓட்டுநர்கள் கைது செய்யப்படுவர். அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும். நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் இரண்டு சக்கர வாகனத்தில் இரவு நேரங்களில் பயணம் செய்வதை தவிர்த்து. இரயிலிலும், பேருந்திலும் பயணிக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது

 



 

இந்நிலையில் இன்று காஞ்சிபுரத்தில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஏகாம்பரநாதர் கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து வரதராஜ பெருமாள் கோவிலிலும் இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்து அறநிலை துறை அமைச்சர் கூறுகையில், நீண்டகாலமாக ஆங்கில புத்தாண்டு அன்று நள்ளிரவு 12 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு பொது மக்களுக்கு தரிசனம் கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அதேபோல் வருகின்ற புத்தாண்டு அன்று இரவும் கோவில்கள் திறப்பதற்கு தடையில்லை. அதேபோல் பொதுமக்களும் நள்ளிரவு 12 மணிக்கு இறைவனை தரிசிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வராமல்,  தோற்று பரவலை கருத்தில்கொண்டு ஒன்றாம் தேதி நள்ளிரவு 12 மணி வரை கோவில் திறந்து இருக்கும் என்பதால் அதற்கு ஏற்றார்போல் நேரத்தை திட்டமிட்டு கோவிலுக்கு வரும் பட்சத்தில் நோய்களிலிருந்தும்  பாதுகாத்துக் கொள்ளலாம் என தெரிவித்தார். ஆன்மீகவாதிகள் என்றும் மலர்ச்சியுடன் இருப்பதற்கு என்றும் திராவிட முன்னேற்றக் கழக அரசு துணை நிற்கும் என தெரிவித்தார்