தீபாவளி பண்டிகை தமிழக மக்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். தீபாவளி பண்டிகை என்றாலே மக்கள் பட்டாசு வெடிப்பது வழக்கம். குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியில்தான் பட்டாசுகள் உற்பத்தி அதிகளவில் நடப்பதால் தமிழ்நாட்டில் பட்டாசுகள் விற்பனை அதிகளவில் நடக்கிறது. பொதுமக்களும் அதிகளவில் பட்டாசுகளை வெடித்து கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.


கொளுத்தும் பட்டாசுகள்:


தொழிற்சாலை வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியாவில் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசம் அடைந்து வருகிறது. தமிழ்நாட்டிலும் காற்றின் தரமானது பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தீபாவளி நாட்களில் அதிகளவு பட்டாசுகள் வெடிப்பதால் காற்றின் தரம் மிக கடுமையாக பாதிக்கப்படுகிறது.


இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்காக நேற்று முதல் கடந்த சில நாட்களாகவே பட்டாசுகள் வெடிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு முதல் தீவிரமாக பட்டாசுகள் வெடிக்கப்பட்டு வருகிறது. இதனால் சென்னையில் காற்றின் தரமானது மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது.


அதிகரிக்கும் காற்று மாசு:


சென்னையில் இன்று காலை 11.27 மணி நிலவரப்படி, காற்றின் தரமானது 167 ஆக பதிவாகியுள்ளது. காற்றின் தரம் 150க்கு மேல் சென்றாலே காற்று மாசுபாடானது மோசமாக பதிவாகியுள்ளது என்று அர்த்தம் ஆகும். சென்னையைப் பொறுத்தவரை ஆலந்தூரில் காற்றின் மாசு அதிகமாக பதிவாகியுள்ளது. ஆலந்தூரில் காற்றின் தரமானது 182-ஆக பதிவாகியுள்ளது. அரும்பாக்கத்திலும் 165 ஆக பதிவாகியுள்ளது. 


சென்னையில் கடந்த திங்கள்கிழமை 129 ஆகவும், கடந்த செவ்வாய்கிழமை 137 ஆகவும், நேற்று 108 ஆகவும் காற்றின் தரம் பதிவானது. ஆனால் இன்று காற்றின் தரம் மோசமான நிலையை அடைந்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை தீபாவளி பண்டிகை மட்டுமின்றி வாகனங்களின் பயன்பாடு, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காற்றின் தரம் மோசமான நிலையிலே பதிவாகிறது.


ஈரோடு, சேலம், கரூரில் மோசமான சூழல்:


தமிழ்நாட்டில் ஈரோட்டிலும், சேலத்திலும் காற்றின் தரம் மாசடைந்துள்ளது. ஈரோட்டில் காற்றின் தரமானது 244 ஆகவும், சேலத்திலும் 221 ஆகவும் காற்றின் தரமாகவும் பதிவாகியுள்ளது. கரூரில் 211 ஆக பதிவாகியுள்ளது. காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் மாசற்ற தீபாவளியை கொண்டாட தமிழக அரசு அறிவுறுத்தியிருப்பதுடன், பொதுமக்கள் தீபாவளி நாளான இன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.