லட்சக்கணக்கில் வெளியேறிய மக்கள்.. காலியாகும் சென்னை.. 2 நாளில் இத்தனை லட்சமா?

"பேருந்து மற்றும் ரயில்கள் மூலமாக கடந்த இரண்டு நாட்களில் 6.5 லட்சம் பொதுமக்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்"

Continues below advertisement

தமிழர் திருநாளாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக பாரம்பரியமாக கொண்டாடப்படும் விழாவாகவும், பொங்கல் விழா இருந்து வருகிறது‌. உலகத்தில் இருக்கும் அனைத்து தமிழர்களும், ஒரே நேரத்தில் கொண்டாடப்படும் விழாவாக பொங்கல் பண்டிகை இருந்து வருவது கூடுதல் சிறப்பாக உள்ளது. 

Continues below advertisement

தொடர் விடுமுறை

சென்னையை பொறுத்த வரை உள்ளூர் மக்களை தாண்டி, வெளியூரில் இருந்து சென்னையில் தங்கி பணிபுரிந்து வருபவர்களின் எண்ணிக்கை பல லட்சமாக உள்ளது. இதனால் பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை கிடைக்கும்போது, தங்களது சொந்த ஊருக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது வழக்கமாக உள்ளது. இந்த முறை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 9 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. 

தொடர் விடுமுறை என்பதால் வழக்கத்தை விட, அதிகளவு பொதுமக்கள் சொந்த ஊரை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதற்காக சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் முதல் பொதுமக்கள் தங்களது, சொந்த ஊருக்கு பயணத்தை தொடங்கியுள்ளனர்.

காத்திருந்து பயணிக்கும் மக்கள்

இதனால் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலையங்கள் ஆகிய இடங்களில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். அதிகளவு பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதை முன்னிட்டு, சிறப்பு பேருந்துகளும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டாலும், நீண்ட நேரம் காத்திருந்தே பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர். 

அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சரி செய்து வருகின்றனர். அதேபோன்று பரநூர் சுங்கச்சாவடி மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடி பகுதிகளிலும் போக்குவரத்துக்கள் முறைப்படுத்தப்பட்டு, 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எவ்வளவு பேர் பயணம் செய்தனர் ?

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் அரசு போக்குவரத்து கழகப் பேருந்துகளில், மூன்று லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். ரயில்கள் மூலமாக 2.5 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். ஆம்னி பேருந்துகள் மூலம் ஒரு லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதுவரை கடந்த இரண்டு நாட்களில் 6.5 லட்சம் பயணிகள் சென்னையில் இருந்து வெளியேறி உள்ளனர். தொடர்ந்து பயணிகள் சொந்த ஊரை நோக்கி படையெடுத்து வருவதால், இது இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று சொந்த வாகனங்கள் மூலம் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சென்றுள்ளார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement