கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தவும் ஊர்வலங்கள் செல்வதற்கும் தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. இந்த தடைக்கு பாஜக, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. கொரோனா தொற்று என்பது அடிப்படை வாழ்வாதாரம் சார்ந்த பிரச்னை என்பதால் அரசின் முடிவில் தலையிட முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. விநாயகர் சதுர்த்திக்கு தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதிப்பது ஏன் என சட்டப்பேரவையில் பாஜக சட்டமன்ற கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதிலளித்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்டை மாநிலமான கேரளாவில் ஓணம் மற்றும் பக்ரீத் பண்டிகைக்கு கட்டுப்பாடுகளை நீக்கி தளர்வுகளை அளித்ததால் கொரோனா பரவல் அதிகரித்ததாகவும் அதுபோன்றதொரு நிலை தமிழ்நாட்டிலும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற அடிப்படையில்தான் விநாயகர் சதுர்த்தியை பொது இடங்களில் கொண்டாட்ட தடைவிதித்துள்ளதாகவும் தெரிவித்தார். இருப்பினும் தமிழ்நாடு அரசு விதித்த தடையை மீறி பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தப்போவதாக பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் தெரிவித்திருந்தது.
Suba Vee Interview: சித்தப்பாகிட்ட சீமான் ஏன் கணக்கு கேக்கல? சுப வீ
விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே இந்து முன்னணி சார்பில் சுமார் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து 3 அடி உயர விநாயகர் சிலையை வைத்து வழிபட முயன்றனர். அப்பொழுது தகவலறிந்த வட்டாட்சியர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதையடுத்து அங்கு வழிபாட்டிற்காக வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலையை மட்டும் போலீசார் எடுத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
Sasikala: கால்குலேட்டரில் அடங்காத சசிகலாவின் சொத்துகள்
இதேபோல் திண்டிவனத்தில் இந்து முன்னணி கட்சியினர் விநாயகர் சிலை வைக்க முயன்றபோது போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை அகற்ற முயன்றனர். இதற்கு இந்து முன்னணி அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கும், இந்து முன்னணி அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதமாகி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அங்கு இருந்த சிலையை எடுத்து சென்று விநாயகர் கோவில் உள்பகுதியில் வைத்தனர்.
இப்படி தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் விநாயகர் சிலைகள் இன்று காலையிலேயே வைக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பதை தடுப்பதற்காக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.