செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் காளி (எ) காளிதாசன். இவர் செங்கல்பட்டு மத்திய மாவட்ட வன்னியர் சங்க தலைவராக உள்ளார். அப்பகுதியில் வன்னியர் சங்கத்தின் மிக முக்கிய நபராக இருந்து வந்தார். இவருக்கு பிரேமா என்ற மனைவியும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. மேலும் பொக்லைன் எந்திரம் வைத்து தொழில் செய்து வந்தார். 

 

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் காலை காளிதாஸ் காரில் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள பிரபல டீ மட்டும் ஜூஸ் கடையில் டீ குடிக்க வந்துள்ளார். அப்போது வெள்ளை நிற காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென டீ கடைக்குள் புகுந்து அவர்கள் மறைத்து வைத்திருந்த வீச்சு அரிவாளால் காளிதாஸ்சின் தலையில் சரமாரியாக வெட்டினர். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்

 

இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர், ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

 

வன்னியர் சங்க நிர்வாகி கொலை:



செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியை அடுத்த நின்னைக்காட்டுரைச் சேர்ந்த வன்னியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் காளிதாசன் நேற்று கொடியவர்கள் சிலரால் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார் என்பதை அறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

நின்னைக்காட்டூரைச் சேர்ந்த காளிதாசன் துடிப்பான தொண்டர் ஆவார். பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிக்கும், வன்னியர் சங்கத்தின் வளர்ச்சிக்கும் கடுமையாக உழைத்தவர். அரசியலில் உயரங்களைத் தொட வேண்டிய அவர், இளம் வயதிலேயே நம்மை விட்டு பிரிந்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காளிதாசனை கொடிய முறையில் படுகொலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தி, அதிகபட்ச தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.

 

குற்றவாளிகளை காப்பாற்ற கூடாது:

 

ஆனால்,   காளிதாசனை கொலை செய்வதற்கு திட்டம் வகுத்துக் கொடுத்த சதிகாரர்களை காப்பாற்றும் நோக்குடன், பெயரளவில் மட்டும் சிலரை கைது செய்து விட்டு வழக்கை முடிக்கத் துடிக்கின்றனர். குற்றவாளிகளைக் காப்பாற்ற காவல்துறை முயலக்கூடாது. காளிதாசன் கொலை வழக்கில் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளையும் கைது செய்து தண்டிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.