வன்னியர் சங்க நிர்வாகி கொலை

 

செங்கல்பட்டு ( Chengalpattu ) செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் காளி (எ) காளிதாசன். இவர் செங்கல்பட்டு மத்திய மாவட்ட வன்னியர் சங்க தலைவராக உள்ளார். அப்பகுதியில் வன்னியர் சங்கத்தின் மிக முக்கிய நபராக இருந்து வந்தார். இவருக்கு பிரேமா என்ற மனைவியும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. மேலும் பொக்லைன் எந்திரம் வைத்து தொழில் செய்து வந்தார்.
  

 

வெள்ளை நிற காரில்

 

இந்த நிலையில் நேற்று காலை காளிதாஸ் காரில் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள பிரபல டீ மட்டும் ஜூஸ் கடையில் டீ குடிக்க வந்துள்ளார். அப்போது வெள்ளை நிற காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென டீ கடைக்குள் புகுந்து அவர்கள் மறைத்து வைத்திருந்த வீச்சு அரிவாளால் காளிதாஸின் தலையில் சரமாரியாக வெட்டினர். காரில் வந்த ஐந்து பேரும் முகமூடி மட்டும் தொப்பி ஆகியவை அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே காளிதாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த அதிர்ச்சி சம்பவத்தை பார்த்த அக்கடையில் இருந்த பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர்.

 

போக்குவரத்து காவலர்கள் டீக்கடை வாசலில்..

 

இந்த நிலையில் அப்பகுதியில்  2 போக்குவரத்து போலீஸ்காரர்கள் கத்தியுடன் சிலர்  டீக்கடைக்குள் இருந்து வெளியே ஓடிவந்து காரில் ஏறி வேகமாக செல்வதை கண்டனர். இதனை அடுத்து போக்குவரத்து காவலர்கள் டீக்கடை வாசலில் இருந்த நாற்காலிகளை தூக்கி கொலை செய்த நபர்கள் மீது வீசி உள்ளனர். மேலும் காரை துரத்தி சென்றவாறு வாக்கி டாக்கி மூலம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக குற்றவாளிகள் தப்பி செல்கிறார்கள் என்பது குறித்த தகவல்களை கூடுவாஞ்சேரி அருகே ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து அவர்களும் உஷாராக இருந்ததால் ஊரப்பாக்கம் பகுதியில் இருவரை காவல் துறையினர் மடக்கி பிடித்துள்ளனர். இதுவரை இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

சாலையில் மறியல் 

 

இந்த நிலையில் காளிதாஸ் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் மாவட்ட தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து மறைமலைநகர் ரெயில் நிலையம் எதிரே உள்ள சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் தொண்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அப்பபகுதிகளில் நேற்றும் இன்றும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தால் பரபரப்புடன் காணப்பட்டது.

 

விசாரணை தீவிரம் 

 

முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடைபெற்றதா அல்லது அரசியல் ரீதியாக இந்த கொலை சம்பவம் நடைபெற்றதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.