இந்தியாவில் அதிவேக ரயில் சேவையை அமல்படுத்தும் வகையில் மத்திய அரசு வந்தே பாரத் ரயில் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வந்தே பாரத் ரயில் சேவை பயன்பாட்டில் உள்ளது. இதுவரை, 12 வந்தே பாரத் ரயில்கள் மூலம் பல்வேறு நகரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி:
இதைத்தொடர்ந்து, சென்னை கோவை ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் சேவையை மத்திய அரசு அறிமுகம் செய்தது. சென்னை-மைசூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்க்குப் பிறகு சென்னையில் இருந்து இயக்கப்படும் இரண்டாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இதுவாகும்.
இந்நிலையில், சென்னை கோவை இடையிலான தமிழ்நாட்டின் இரண்டாவது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி, இன்று சென்னை சென்ட்ரலில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயிலில் ஒரு எக்ஸிகியூட்டிவ் கோச் உட்பட 8 பெட்டிகள் உள்ளது. 530 பேர் வரை பயணிக்க முடியும். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் பங்கேற்றனர்.
6 மணிநேரம்:
சென்னை மற்றும் கோயம்புத்தூர் இடையே 495.28 தூரத்தை 5 மணி 50 நிமிடங்களில் இந்த ரயில் கடக்கும். இந்த ரயில் திருப்பூர், ஈரோடு மற்றும் சேலத்தில் நிறுத்தப்படும். புதன்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் இந்த ரயில் இயக்கப்படும்.
இந்த ரயில் கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும். திரும்பும் போது, சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 8.30 மணிக்கு கோவை சென்றடையும்.
அதிக முதலீட்டை ஈர்க்க போகும் வந்தே பாரத்:
சென்னை-கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தமிழ்நாட்டின் முக்கிய வணிக மற்றும் நகர்ப்புற மையங்களுக்கான இணைப்பை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டதன் மூலம், சென்னை மற்றும் கோவையைச் சுற்றியுள்ள வணிக மற்றும் குடியிருப்பு ரியல் எஸ்டேட் சந்தைகள் மிகப்பெரிய வளர்ச்சியைக் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிராந்தியமானது அதன் மேம்படுத்தப்பட்ட இணைப்பு காரணமாக அதிக முதலீட்டைக் காண வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டிற்குள் இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரயில் இது என்பது குறிப்பிடத்தக்கதாகும். முன்னதாக, செகந்திராபாத் மற்றும் திருப்பதி இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
இந்தியாவில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள்:
டெல்லி - வாரணாசி
டெல்லி - ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா
காந்தி நகர் தலைநகர் - மும்பை சென்ட்ரல்
அம்ப் ஆண்டௌரா - டெல்லி
சென்னை சென்ட்ரல் - மைசூர்
பிலாஸ்பூர் - நாக்பூர்
புதிய ஜல்பைகுரி - ஹவுரா
செகந்திராபாத் - விசாகப்பட்டினம்
சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் (மும்பை) - சோலாப்பூர்
சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் (மும்பை) - ஷிர்டி
போபால் - டெல்லி