பிரதமர் மோடி இன்று சென்னைக்கு வருகை தந்து பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதற்காக 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 


பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் 1.35 மணிக்கு ஹைதராபாத் பேகம்பேட் விமான நிலையத்திலிருந்து விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் சென்னைக்கு 2.45 மணிக்கு வருகிறார். மாலை 3 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டிருக்கும் ஒருங்கிணைந்த புதிய முனையத்தை திறந்து வைக்கிறார். பின்னர் மாலை 3:30 மணிக்கு இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்பட்டு, மாலை 3: 50 மணிக்கு, சென்னை ஐஎன்எஸ் அடையாறு சென்றடைகிறார். மாலை 3:55 மணிக்கு அங்கிருந்து காரில் புறப்பட்டு, மாலை 4 மணிக்கு செண்ட்ரல் ரயில் நிலையத்திற்கு செல்கிறார்.


அங்கு மாலை 4 மணியிலிருந்து 4:20 மணி வரை, சென்னை கோவை இடையே அதிவிரைவு ரயில் ஆன வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். அதன் பின்பு மாலை 4:25 மணிக்கு சென்னை  சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காரில் புறப்பட்டு, மாலை 4:40 மணிக்கு, விவேகானந்தர் இல்லத்திற்கு செல்கிறார். அங்கு மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் கலந்து கொள்கிறார். முதலில் இந்த நிகழ்ச்சி மைலாப்பூர் ராமகிருஷ்ணா மடத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பாதுகாப்பு காரணங்களால் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


அங்கிருந்து மாலை 6 மணிக்கு இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்படும் பிரதமர் மாலை 6:20 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் கிரவுண்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கிறார்.


இரவு 7:45 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து, இந்திய விமானப்படை தனி விமானத்தில் பிரதமர் மோடி கர்நாடக மாநிலம் மைசூர் புறப்பட்டு செல்கிறார். இரவு 8:40 மணிக்கு மைசூர் விமான நிலையம் சென்றடைகிறார்.


ஏப்ரல் 9ஆம் தேதி ஞாயிறு காலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு பிரதமர் மோடி செல்கிறார். அதன் பின்பு காலை 9:45 மணிக்கு தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் தெப்பக்காட்டில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் பிரதமர் மோடி, காலை 10:20 மணிக்கு, கர்நாடக மாநிலம் மைசூர் யுனிவர்சிட்டி ஹெலிபேட் தளத்தில் சென்று இறங்குகிறார்.


சென்னைக்கு பிரதமர் மோடி வருவதையொட்டி டி.ஜி.பி சைலேந்திர பாபுவின் உத்தரவின் பேரில் 22ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடி கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராகுல் காந்தி எம்பி பதவியிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து காங்கிரஸ் கட்சியினரின் தொடர் போராட்டம் காரணமாக, இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தரப்பில் வெளியான தகவலின் பேரில் காங்கிரஸ் கட்சியினர் போலீசார் பாதுக்காப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.


சென்னைக்கு பிரதமர் மோடி வருவதை ஒட்டி நேற்றைய தினம் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. எந்த இரு அசம்பாவிதமோ பாதுகாப்பு குறைபாடோ ஏற்படாமல் இருக்க சென்னை முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.