சென்னை விமான நிலையத்தின், ஒருங்கிணைந்த புதிய முனையத்திற்கு அண்ணா பன்னாட்டு  விமானம் முனையம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.


சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே இருந்த அண்ணா, காமராஜர் பெயர் பலகைகள் அகற்றப்பட்ட நிலையில், தற்போது பணிகள் நிறைவடைந்த ஃபேஸ் 1, பகுதிக்கு அண்ணா பெயர் சூட்டப்பட்டுள்ளது.


ஃபேஸ் 2 பணிகள் நிறைவடைந்ததும், அதற்கு காமராஜர் பெயர் சூட்டப்படும் என்று, விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.


சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராஜர் உள்நாட்டு விமான நிலையம் என்றும், சர்வதேச முனியத்திற்கு அண்ணா சர்வதேச விமானம் முனையும் என்றும் ஏற்கனவே பெயர் சூட்டப்பட்டிருந்து. இந்திய பிரதமராக வி பி சிங்கும், தமிழ்நாடு முதலமைச்சராக கருணாநிதியும் இருந்தபோது இந்த பெயர் சூட்டு விழா நடந்தது.




அதை அடுத்து 2008 ஆம் ஆண்டு, புதிய உள்நாட்டு, சர்வதேச முனையங்கள் ரூபாய் 1,250 கோடி செலவில் அமைப்பதற்கான பணி தொடங்கியது. அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி, அதற்கான அடிக்கல் நாட்டினார். அதன் பின்பு 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பணிகள் முடிந்து, இந்திய துணை ஜனாதிபதி அந்த முனையங்களை திறந்து வைத்தார்.


அதன்பின்பு 2018 ஆம் ஆண்டு ரூ.2,400 கோடியில், ஒருங்கிணைந்த புதிய விமான நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை பிரதமர் நரேந்திர மோடி, வீடியோ கான்பரன்ஸ் வழியாக தொடங்கி வைத்தார். இந்தப் பணிகள் ஃபேஸ் 1, ஃபேஸ் 2 என்று இரு கட்டங்களாக நடக்கின்றன. அதில் முதல் கட்ட ஃபேஸ் 1, பணி நிறைவடைந்து இன்று பிரதமர் முறைப்படி தொடங்கி வைக்கிறார்.


 இந்த நிலையில் புதிய விமானம் முனையங்கள் கட்டும் பணிகள் கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக, சென்னை விமான நிலையத்தில் நடந்து வந்தது. இதை அடுத்து ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த காமராஜர், அண்ணா என்ற பெயர் பலகைகள் அகற்றப்பட்டிருந்தன. அந்தப் பெயர் பலகைகளை மீண்டும் அமைக்க வேண்டும் என்று, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து வந்ததோடு, அவ்வப்போது அறப்போராட்டங்களையும் நடத்தி வந்தனர். 


அப்போது விமான நிலையம் ஆணையம் தரப்பில், புதிய முனையங்கள் கட்டுமான பணி நடப்பதால் பெயர் பலகைகள் அகற்றப்பட்டிருக்கின்றன. புதிய கட்டுமான பணிகள் நிறைவடைந்ததும், மீண்டும் தலைவர்களின் பெயர் பலகைகள் வைக்கப்படும் என்று அறிவித்தனர்.




இந்நிலையில் தற்போது சென்னை விமான நிலையத்தின் ஒருங்கிணைந்த முனையத்தில், முதற்கட்ட பணி நிறைவடைந்து உள்ளதால், அந்த முதற்கட்ட பணியில் சென்னை சர்வதேச முனையப் பகுதிகள் அடங்குகிறது. எனவே அதில், அண்ணா பன்னாட்டு முனையம் என்ற பெயர் மீண்டும்  அமைக்கப்பட்டுள்ளது. நிரந்தரமான பெயர் பலகை வெகு விரைவில் அமைக்கப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.


அதைப்போல் ஒருங்கிணைந்த விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட பணிகள் நிறைவடைந்ததும், அங்கு காமராஜர் உள்நாட்டு முனையம் என்ற பெயர் பலகை அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.