காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் தாலுக்கா களியனூர் கிராமத்தில் வசிப்பவர்கள் ஆறுமுகம்- வடிவுக்கரசி தம்பதியினர். இவர்களுக்கு ஜென்னி, சாவித்திரி என இரு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர். இவர்களில் ஜென்னி, சாவித்திரி, ஆகிய இரு பெண் பிள்ளைகளும், பிறவிலேயே வாய் பேச முடியாத, காது கேளாத,மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர்.
சிறுமி ஜென்னி சென்னை காது கேளாதோர் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பும், சாவித்திரி காஞ்சிபுரம் காது கேளாதோர் பள்ளியிலும் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் சிறுமிகள் இருவரும் தங்களின் தாய், தந்தை மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள், அவ்வப்போது வழங்கும் பரிசு பணத்தை உண்டியலில் போட்டு சிறுக சேமித்து வைத்து வந்துள்ளனர். தங்களைப் போன்ற மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு வழங்கி உதவிட முடிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து சிறுமிகள் இருவரும் தாங்கள் சேமித்து வைத்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கிட முடிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து தாய், தந்தை இருவருடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மாற்று திறனாளி சிறுமிகள் இருவரும் தலா ஐந்தாயிரம் ரூபாய் வீதம் 10 ஆயிரம் ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அவர்களிடம் வழங்கினார்கள். வாய் பேச,காது கேட்க முடியாத மாற்றுத்திறனாளி சகோதரிகள் செய்த தன்னிகரில்லா சேவையை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி பாராட்டி கௌரவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்