சென்னையில்  பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை  அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  என்.ஐ. ஏ வழக்குகளில் தொடர்புடையவர்களின் வீடுகளில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். ஓட்டேரி, திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில்  தேசிய புலனாய்வு  முகமை அதிகாரிகளின் சோதனை நடைபெற்று வருகிறது. தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பவர்களாக கருதப்படும் நபர்களின் வீடுகளிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோன்று மதுரை, தேனி மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் 8-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருடன் தொடர்பில் உள்ளார்களா என விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


சென்னை, பழனி, திருச்சியில் சோதனை:


சென்னை திருவொற்றியூரில்  பிஎஃப்ஐ முன்னாள் வடசென்னை மாவட்ட செயலாளர் அப்துல் ரசாக் என்பவரது வீட்டில் 6 பேர் கொண்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம்  பழனி நேதாஜி நகரில்  தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மதுரை மண்டல தலைவர் முகமது கைசர்  வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டம் கம்பம்மெட்டு காலனியில் உள்ள எஸ்டிபிஐ மாவட்ட  பொதுச்செயலாளர் சாதிக்  அலி என்பவர் வீட்டில் 3 பேர் கொண்ட  குழு சோதனையிட்டு வருகிறது.


மதுரை, திருச்சியில் சோதனை:


மதுரையில் கைசர் என்பவரது வீட்டில் 5 பேர் கொண்ட குழு சோதனை நடத்தி வருகிறது. இதேபோன்று நெல்பேட்டையில் பிஎஃப்ஐ தடை வழக்கு மற்றும் நிதிப்பரிமாற்றம் தொடர்பாக,  பிஎஃப்ஐ முன்னாள் நிர்வாகியான அப்பாஸ் என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்றது. தொடர்ந்து அவரை விசாரணைக்காக அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். மேலும், வில்லாபுரம், தெப்பக்குளம் பகுதியிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இதனிடையே, சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த தஞ்சையை சேர்ந்த  முகமது அசாப் என்பரை, தடுத்து நிறுத்தி விமான நிலையத்தில் வைத்தே என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.


அகதிகள் முகாமில் திடீர் சோதனை:


இதனிடையே, திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள அகதிகளுக்கான சிறப்பு முகாமில் மாநகர போலீசார்  திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் உள்ளிட்டோர் அங்கு சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.