சென்னை வாலிபர் விக்னேஷ், போலீஸ் காவலில் மரணமடைந்த விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை தலைமை செயலக குடியிருப்பு போலீசார் கடந்த ஏப்ரல் 18ம் தேதி இரவில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, ஆட்டோவில் கஞ்சா மற்றும் ஆயுதங்களுடன் வந்த விக்னேஷ் என்பவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
போலீஸ் விசாரணையில் அவர் மரணம் அடைந்தது தொடர்பாக கொலை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த சிபிசிஐடி போலீசார், சிறப்பு உதவி ஆய்வாளர் குமார், பவுன்ராஜ் , காவல்துறையினர் முனாப், ஜெகஜீவன், சந்திரகுமார், ஊர்காவல் படையை சேர்ந்த தீபக் ஆகியோரை கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை என்பதால், வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி விக்னேஷின் சகோதரர் வினோத் மற்றும் உறவினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை நீதிபதி சிவஞானம் விசாரித்தார். அப்போது மனுதாரர்கள் தரப்பில், காவல் ஆய்வாளர் மோகந்தாஸ் என்பவர் மனுதாரர்கள் வீட்டுக்கு வந்து ஒரு லட்சம் ரூபாயை கொடுத்து வழக்கை முடிக்க முயற்சித்ததால், விசாரணை நியாயமாக நடக்குமா என்ற அச்சம் எழுந்துள்ளதாகவும், வழக்கில் இதுவரை இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை எனவும் வாதிடப்பட்டது.
ஆனால், விசாரணை முறையாக, பாரபட்சமற்ற முறையில் நடைபெற்று வருவதாகவும், 84 சாட்சிகளிடம் விசாரித்து 15 கண்காணிப்பு கேமரா பதிவுகள், ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு, விசாரணை முடிவடையும் நிலையில் இருப்பதாகவும் கூறி, சிபிஐ விசாரணைக்கு மாற்ற கூடாது என சிபிசிஐடி தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் புலன் விசாரணை குறித்த ஆவணங்களை ஆய்வு செய்வதில் சம்பவம் தொடர்பாக 6 காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளது, நேரில் பார்த்த சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது, சம்பவ இடத்திலிருந்து ரத்தக்கரை படிந்த இரும்பு கம்பி மற்றும் லத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதில் இருந்து சிபிசிஐடி பாரபட்சமான முறையில் விசாரணை நடத்துவதாக கூற எந்த ஆதாரங்களும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும், விசாரணை முடியும் தருவாயில் உள்ள நிலையில் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி, சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுவை நீதிபதி சிவஞானம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.