இந்து மதத்தினரை அவதூறாக பேசியதாக திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா மீதான புகாரில் வழக்குப் பதிவு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


 

கடந்த செப்டம்பர் மாதம் 6ம் தேதி சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு நடைபெற்ற பாராட்டு விழா நிகழ்ச்சியில் பேசிய மத்திய முன்னாள் அமைச்சரும், திமுக துணை பொதுச் செயலாளருமான, திமுக எம்.பி.-யுமான ஆ.ராசா இந்து மதம் குறித்து பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. 

 

இந்த விவகாரம் தொடர்பாக ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஜெ.ஜெ. கட்சியின் நிறுவனர் ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஆ.ராசாவின் பேச்சு இரு மதத்திற்கு இடையே விரோதத்தை ஏற்படுத்தி , மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளதாகவும், ராசாவின் பேச்சால் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

 

வழக்கத்தில் இல்லாத மனு நூல் குறித்து  பேசி தேவையற்ற பிரச்னைகளை ஏற்படுத்திய ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். ஆனால், ஆளும் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பதால் ராசா மீதான புகாரை காவல்துறையினர் ஏற்றுக்கொள்ளவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். 

 

எனவே ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு உள்ளது.

 



மற்றொரு வழக்கு

















 

தானம் அளிப்பவரின் சகோதரர் புகார் தெரிவித்ததால் நிறுத்தி வைக்கப்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 

கல்லீரல் பாதிக்கப்பட்ட ஜஸ்பிர் சிங் என்பவருக்கு அவரது உறவினர் நரேஷ்குமார் சாகர், கல்லீரல் தானம் வழங்க முன் வந்தார். அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருக்கும் தனியார் மருத்துவமனை (ரெலா மருத்துவமனை) உரிய ஆவணங்களை, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதியளிக்கும் குழுவுக்கு அனுப்பி வைத்தது.

 

அதை பரிசீலித்த குழு, கடந்த செப்டம்பர் 16ம் தேதி ஒப்புதல் வழங்கிய நிலையில், மருத்துவமனைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை கூறி, நரேஷ்குமார் சாகரின் சகோதரர், கடந்த செப்டம்பர் 29ம் தேதி கடிதம் அனுப்பினார்.

 

இதையடுத்து அறுவை சிகிச்சையை நிறுத்தி வைத்த மருத்துவமனை நிர்வாகம், அந்த புகாரை உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதியளிக்கும் குழுவுக்கு அனுப்பி வைத்தது.

 

இந்நிலையில், ஏற்கனவே குழு அளித்த ஒப்புதலின் அடிப்படையில் அறுவை சிகிச்சையை மேற்கொள்ளும்படி மருத்துவமனைக்கு உத்தரவிடக் கோரி உறுப்பு தானம் செய்யும் நரேஷ்குமார் சாகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதியளிக்கும் குழு அளித்த ஒப்புதலை, மூன்றாம் நபர் அளித்த ஆதாரமற்ற புகாரின் அடிப்படையில் ஒரு போதும் மறு ஆய்வு செய்யப்பட மாட்டாது எனவும், மருத்துவமனை அறுவை சிகிச்சையை மேற்கொள்ளலாம் எனவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

இதை பதிவு செய்த நீதிபதி, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு, தானம் அளிப்பவரின் சகோதரர் அளித்த புகார் தடையாகவில்லை எனக் கூறி, மருத்துவ தகுதி அடிப்படையில் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவமனைக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.