உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக கருதப்படும் ரசாயனங்கள் மூலம் தயாரிக்கப்படும் “பசுமை” பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்யவும் வெடிக்கவும் அனுமதிக்கப்படும் என்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மக்களுக்கு, சென்னை காவல்துறை வியாழக்கிழமை அறிவுரை வழங்கியுள்ளது. 


தீபாவளி


இந்தியாவின் மிக முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் அதற்கான கட்டுப்பாடுகளை ஒவ்வொரு மாநில அரசும் விதித்து வருகின்றன. தீபாவளி என்றாலே பட்டாசுகள்தான், அப்படி இருக்கையில் அது சுற்றுச்சூழலுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் கேடு இல்லாத வகையில் இருக்க வேண்டும் என்று ஆளும் அரசுகள் விரும்புகின்றன. எனவே நேரக்கட்டுப்பாடு, சத்தம், புகை ஆகியவற்றை கவனத்தில் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.


பட்டாசு வெடிக்கும் நேரக்கட்டுப்பாடு


தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அக்டோபர் 24-ஆம் தேதி பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்க காலை 6-7 மணி மற்றும் இரவு 7-8 மணி என இரண்டு நேர சாளரங்களை அனுமதித்துள்ளது. 125 டெசிபலுக்கு மேல் ஒலி எழுப்பும் பட்டாசுகளை தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சீனாவில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை விற்கவோ, பயன்படுத்தவோ கூடாது எனவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. 



பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்


குடிசைகள் அல்லது பல மாடி குடியிருப்புகளுக்கு அருகில் ராக்கெட் பட்டாசுகளை வெடிக்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மெழுகுவர்த்தி மற்றும் எண்ணெய் விளக்குகளுக்கு அருகில் பட்டாசுகளை வைப்பதையும், சமையலறைகளில் அடுப்பு அல்லது அடுப்புகளுக்கு அருகில் ஈரமான பட்டாசுகளை உலர்த்துவதையும் பொதுமக்கள் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்: Student Murder in Thomas Mount : ”இப்படித்தான் திட்டமிட்டு கொலை செய்தேன்” : மாணவி படுகொலை.. கொலையாளி சதீஷ் பரபரப்பு வாக்குமூலம்...


விழிப்புணர்வு


"பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் வார்டுகள் மற்றும் மாணவர்களுக்கு தீ விபத்துகள் மற்றும் பட்டாசால் ஏற்படும் காயங்களின் தீவிரத்தை விளக்க வேண்டும் மற்றும் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்" என்று காவல்துறை ஆலோசனை கூறுகிறது. தீ விபத்துகள் ஏற்பட்டால், பொதுமக்கள் காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையை 112 உதவி எண்ணிலும், 108 மருத்துவ அவசர உதவி எண்ணிலும் தொடர்பு கொள்ள வேண்டும்.



தடைசெய்ய வேண்டாமென முதல்வர் வேண்டுகோள்


மேலும், தமிழகத்தில் பட்டாசு உற்பத்தி தொழிலை பாதிக்கும் என்பதால், பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டாம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் புதன்கிழமை எழுதிய கடிதத்தில், ”கடந்த ஆண்டு விடுத்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துவதாகக் கூறியுள்ளார். பசுமை பட்டாசுகள் அறிவியல் பூர்வமாக உருவாக்கப்பட்டு உரிமம் பெற்ற வணிகர்கள் மூலம் விற்பனை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. “அனுமதிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்ட பட்டாசு விற்பனையை அனுமதிக்குமாறு நான் உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். வேறு எந்த மாநிலத்திலும் பட்டாசுக்கு முழுத் தடை விதிக்காத நிலையில், உங்கள் நல்ல செயல் சிவகாசியைச் சுற்றியுள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்வில் ஒளியேற்றும், குறிப்பாக இந்தத் தொழிலை நம்பி வாழும் கிராமப்புறப் பெண்களின், ஓராண்டு ஜீவாதாரத்தில் 70 சதவிகிதம் தீபாவளிதான்" என்று முதல்வர் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது