சென்னை பெருங்களத்தூர் பகுதியில் தாம்பரம்- வண்டலூர் மார்க்கமான பாதை பணிகள் முடிந்து திறப்பு விழாவிற்காக தயாராகி வருகிறது


பெருங்களத்தூர் போக்குவரத்து நெரிசலும்


சென்னையில் இருந்து தென் மாவட்டத்திற்கு செல்லும் பயணிகள் மற்றும் பொது மக்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய அச்சம் என்னவென்றால், போக்குவரத்து நெரிசல்தான். குறிப்பாக பண்டிகை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சென்னை புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர் கதை ஆகியுள்ளது.



குறிப்பாக சென்னையில் இருந்து தென் மாவட்டத்திற்கு செல்பவர்களுக்கு, பிரதான சாலையாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையை பயன்படுத்துபவர்கள் அனைவரும் பெருங்களத்தூர் பகுதியை கடக்க வேண்டிய சூழல் உள்ளது. ஆனால் பெருங்களத்தூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் என்பது கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகிறது. 


பெருங்களத்தூர் மேம்பாலம் 


பெருங்களத்தூர் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பெருங்குளத்தூர் மேம்பாலம் அமைப்பதற்காக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகில் சுமார் 234 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணியை, மாநில நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே நிர்வாகம் இணைந்து 2019 துவங்கின. இத்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் கடந்த 2022 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டு, திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வண்டலூர் முதல் தாம்பரம் மார்க்கமான பாதை பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.




இதன் காரணமாக பெருங்களத்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்தது. இதனைத் தொடர்ந்து, புது பெருங்களத்தூர், சீனிவாசன் நகர் வழியாக இறங்கும் பாதையும் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. அடுத்த கட்டமாக, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வண்டலூர் மார்க்கமான பணிகள் துவங்கப்பட்டன, ஒரு சில காரணங்களால் பணிகள் தாமதம் ஆகின, இந்தநிலையில் தற்பொழுது பணிகள் வேகம் எடுக்கப்பட்டு இரவு மற்றும் பகல் என இரண்டு வேளைகளிலும் பணிகள் தீவிர படுத்தப்பட்டன.


 பணிகள் தீவிரம்


தேர்தலுக்குப் பிறகு பணிகள் தீவிரமடைய துவங்கின. ஒரு சில பணிகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், இரண்டு வாரத்திற்குள் வண்டலூர் மார்க்கமான, மேம்பாலம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பாதை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டால் பெருங்களத்தூர் நிலவி வரும் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.





சென்னையில் இருந்து வெளியேறும் வாகனங்களுக்கு இந்த பாதை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பெருங்களத்தூர் மேம்பாலம் அமைக்கும் திட்டத்தின் அடுத்த கட்ட பணிகளான நெடுங்குன்றம் மார்க்கமான பாதை மட்டுமே அமைக்க வேண்டியது உள்ளது. அமைய உள்ள இடத்தின் பெரும் பகுதி வனத்துறைக்கு சொந்தமானவை என்பதால், இதற்காக அனுமதி கேட்டு வனத்துறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கடிதம் அனுப்பி உள்ளனர்.


 மக்கள் மகிழ்ச்சி


இதே போன்று பெருங்களத்தூர் வழியாக ராஜகீழ்ப்பாக்கத்தை இணைக்கும் தாம்பரம் ஈஸ்டர்ன் பைபாஸ் சாலை திட்டத்திற்கும் நிலம் கேட்டு மத்திய வனத்துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அடுத்த ஓரிரு மாதங்களில் மத்திய வனத்துறை அனுமதி கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது





தற்பொழுது வண்டலூர் மார்க்கமான மேம்பாலம் திறக்கப்பட்டால் பெருமளவு போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக உள்ளூர் மக்களும் இந்த மேம்பாலம் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது