சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று நடைபெறாத காரணத்தால் தடுப்பு ஊசி செலுத்திக்கொள்வதற்காக பொதுமக்கள் ஏராளமானோர், காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் குவிந்தனர். இதனால் சமூக இடைவெளி காற்றில் பறந்தது.
கடந்த 2019-ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றானது உலகம் முழுவதும் வேகமாக பரவி தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை காரணமாக தமிழகம் கடந்த இரண்டு மாதங்களாக மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதுவரை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுபடுவதற்கு முறையான மருந்துகள். இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு கடைசி ஆயுதமாக கொரோனா வைரஸ் தடுப்பூசி மட்டுமே என மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இந்த வருடம் ஜனவரி பிற்பகுதியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றின் தடுப்பூசி இந்தியா முழுவதும் போடப்பட்டு வந்தாலும் ஆரம்ப காலத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் குறித்து பல்வேறு வதந்திகள் பரவிவந்தன. இதன் காரணமாக கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்து வந்தன. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை இந்தியா முழுவதும் வேகமாக பரவியது, இதனை அடுத்து அரசாங்கம் சார்பில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வைரஸ் தடுப்பூசிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டது .
தமிழக அரசு சார்பில் கடந்த சில வாரங்களாகவே தமிழகம் முழுவதும் பல்வேறு சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 40 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது . அப்பகுதியில் வசிக்கும் மக்கள் ஏதுவாக தடுப்பூசியை போட்டுக்கொண்டு வந்தனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் குறைந்த காரணத்தினால் இன்று காலை 40 சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறவில்லை. எனவே கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்த விரும்பி பொதுமக்கள் அனைவரும் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் படையெடுத்தனர்.
தடுப்பூசி போட்டுகொள்ள ஆர்வமுள்ளவர்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியின்றி காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்துவதற்காக கூட்டம் கூட்டமாக காத்துக் கொண்டிருந்தனர். இதனால் சமூக இடைவெளி காற்றில் பறக்கவிட்டனர்.இதுவரை காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 89,132 நபர்கள் தடுப்பு ஊசி செலுத்தியுள்ளனர். இதில் 18+ வயதுடையோர் 36,399 நபர்கள் தடுப்பூசி செலுத்து கொண்டனர்.18 வயதுக்கு மேற்பட்ட பெரும்பாலும் ஆர்வத்துடன் தடுப்பூசி எடுத்துக்கொள்ள நீண்ட வரிசையில் காத்துக் கொண்டு தடுப்பூசியை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் இன்னும் சில நாட்களில் தீர்ந்துவிடும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்துவதுமுக்கியமானது என்றாலும், அரசு சொல்லும் அறிவுரைகளை பொதுமக்கள் சமூகப் பொறுப்புடன் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.