சென்னை விமான நிலையத்தில், இன்று அதிகாலையிலிருந்து, இன்று காலை 8 மணி வரையில், விமானங்களை இயக்குவதற்கு, விமானிகள், விமான பணியாளர்கள் இல்லாத காரணத்தால், 62 விமான சேவைகள், பாதிக்கப்பட்டு பல ஆயிரக்கணக்கான பயணிகள், கடும் அவதி அடைந்தனர்.

Continues below advertisement

இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள்

நாடு முழுவதும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள், கடந்த சில தினங்களாக பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. அதைப்போல் சென்னை விமான நிலையத்திலும் நான்காவது நாளாக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனங்கள் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி, பல மணி நேரம் தாமதம் ஆவதோடு, ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்படுவதும் தொடர்கின்றன. 

ரத்தான விமானங்கள்

அதைப்போல் சென்னை விமான நிலையத்தில் இன்று 00.01 மணியில் இருந்து, காலை 8 மணி வரை, 62 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.அதில் ரத்து செய்யப்பட்ட விமானங்கள் 40. புறப்பாடு விமானங்கள் 26, வருகை விமானங்கள் 14. அதைப்போல் பல மணி நேரம் தாமதமாகிய விமானங்கள் 22. புறப்பாடு விமானங்கள் 10, வருகை விமானங்கள் 12. இந்த விமானங்கள் அனைத்தும் 2 மணி நேரத்தில் இருந்து, 6 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டன. 

Continues below advertisement

இந்த விமானங்கள் அபுதாபி, துபாய் இலங்கை, சிங்கப்பூர், பாங்காக், இந்தோனேசியா ஆகிய சர்வதேச விமானங்கள் மற்றும் கோவை, அகமதாபாத் டெல்லி திருச்சி ஹைதராபாத் கொல்கத்தா மும்பை புவனேஸ்வர் ராய்ப்பூர், இந்தூர், விசாகப்பட்டினம் பாட்னா உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லக்கூடிய உள்நாட்டு விமானங்களும் உள்ளன. 

முறையான பதில் அளிக்கவில்லை என புகார்

இந்த விமானங்கள் தாமதம் ரத்து குறித்து முறையான அறிவிப்புகள் எதுவும் பயணிகளுக்கு முன்னதாகவே தெரிவிக்கப்படவில்லை. அதோடு எந்த விமானங்கள் ரத்து எவ்வளவு நேரம் தாமதம் என்ற விவரங்களும் தெரிவிக்கப்படவில்லை. பயணிகள் இது குறித்து சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களிடம் கேட்டாலும் எந்த தகவலும் முறையாக அறிவிக்கப்படவில்லை.

மேலும் விமானங்கள் புறப்பாடு வருகை குறித்து சென்னை விமான நிலைய இணையதளத்தில் பயணிகள் பார்த்தால், அதில் விமானங்கள் ரத்து தாமதம் பற்றி எந்த தகவலும் குறிப்பிடாமல் அன்னோன் என்று மட்டுமே இருந்ததால், அந்த விமானம் ரத்த கால தாமதமா என்று கூட தெரியாமல் பயணிகள் பெரும் தவிப்புக்கு உள்ளானார்கள். 

இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் நூற்றுக்கணக்கானோர் சென்னை சர்வதேச விமான நிலையம் புறப்பாடு பகுதிக்குள், சூழ்ந்து கொண்டு முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக விமான நிலைய போலீசார் பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து வந்து பயணிகளை சமாதானப் படுத்தினர். 

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

அப்போது பயணிகள் எந்த விமானம் தாமதம் ரத்து என்பதை எங்களுக்கு தெளிவாக அறிவியுங்கள். இணையதளத்தில் அன்னோன் என்று போடுவதை நிறுத்தி, ரத்து அல்லது தாமதம் என்று தெளிவாக போடுங்கள் என்று கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறி பயணிகளை சமாதான செய்தனர். 

இவ்வாறு சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பான ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் பணியில் உள்ள அதிகாரிகள் பயணிகளின் உணர்வுகளை மதிக்காமல் பயணிகள் கேட்கும் கேள்விகளுக்கும் சரியாக பதில் அளிக்காமல் இருப்பதாக பயணிகள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர்.