சென்னை விமான நிலையத்தில் இருந்து, இன்று ஒரே நாளில், கொல்கத்தா, மும்பை, பெங்களூர், ஹைதராபாத், கவுகாத்தி, சீரடி ஆகிய நகரங்களுக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டிய 7 விமானங்களும், இந்த நகரங்களில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய 7 விமானங்களும், மொத்தம் 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதோடு லண்டன், சிங்கப்பூர், மும்பை விமானங்கள் பல மணி நேரம் தாமதமானது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  விமானங்களை இயக்க விமானிகள் இல்லாதது, போதிய பயணிகள் இல்லாதது, மோசமான வானிலை போன்ற காரணங்களால், இதேபோல் விமானங்கள் ரத்து, தாமதம் ஆகுவதாக கூறப்படுகிறது.


14 விமானங்கள் இன்று ஒரே நாளில்..


சென்னையிலிருந்து கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத், கவுகாத்தி ஆகிய பெருநகரங்களுக்கு செல்லக்கூடிய நான்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள், மும்பை செல்ல வேண்டிய ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள், சீரடி செல்லக்கூடிய ஸ்பை ஜெட் பயணிகள் விமானம் ஆகிய 7 புறப்பாடு விமானங்கள், அதைப்போல் இந்த பெருநகரங்களில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய ஏழு விமானங்கள் என மொத்தம் 14 விமானங்கள் இன்று ஒரே நாளில் ரத்தானதால், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


தொடர்ந்து ரத்து


அதேபோல் சென்னையில் இருந்து லண்டன் செல்ல வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் இன்று 6 மணி நேரம் தாமதமாகவும், சிங்கப்பூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 8 மணி நேரம் தாமதமாகவும், அதோடு மும்பை, ஹைதராபாத் விமானங்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன. மேலும் கடந்த மூன்று நாட்களாக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானங்களான கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத், கவுகாத்தி மற்றும் சர்வதேச  விமானமான தமாம் ஆகிய விமானங்கள், தொடர்ந்து ரத்து செய்யப்படுகின்றன.


அறிவிப்புகள் வெளியிடுவது இல்லை


இதைப்போல் சென்னை விமான நிலையத்தில் தொடர்ந்து கடந்த சில தினங்களாக விமானங்கள் ரத்து, இல்லையேல் பல மணி நேரம் தாமதம் போன்றவைகள் காரணமாக, பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதைப்போல் விமானங்கள் ரத்து, தாமதம் குறித்து பயணிகளுக்கு முறையான முன்னறிவிப்புகளும் செய்யப்படவில்லை என்று பயணிகள் தரப்பில் கூறப்படுகிறது. அதைப்போல் சென்னை விமான நிலையத்தில் உள்ள, விமானங்கள் வருகை, புறப்பாடு குறித்து அறிவிக்கும் டிஸ்பிளே போர்டுகளிலும் சரியானபடி அறிவிப்புகள் வெளியிடுவது இல்லை என்று பயணிகள் பரப்பில் குறை கூறுகின்றனர்.


சில தினங்களாக ரத்து


இந்த விமானங்கள் ரத்து தாமதம் ஆகியவற்றுக்கு காரணம், நிர்வாகம் செயல்பாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்று, ஒரே வரியில் விமான நிறுவனங்கள் பதில் கூறுகின்றன. என்ன காரணம் என்று பயணிகளுக்கு தெளிவாக அறிவிப்பு எதுவும் செய்யவில்லை. ஆனாலும் இது குறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் கடந்த சில தினங்களாக ரத்து செய்யப்படுவதற்கு காரணம், போதிய விமானிகள் பணியில் இல்லாததால், விமானங்களை இயக்க விமானிகள் இல்லாமல் விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன.


சீரடி விமானம் போதிய பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்படுகிறது. அதைப்போல் மும்பை விமானங்கள், அங்கு நிலவும் மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் சிங்கப்பூர் லண்டன் விமானங்களும், அங்கு நிலவும் மோசமான வானிலை காரணமாக, சென்னைக்கு தாமதமாக வந்துவிட்டு, தாமதமாக புறப்பட்டு செல்கின்றன என்று கூறுகின்றனர்.