பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தேசிய கட்சியின் மாநில தலைவர் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தி.மு.க. அரசு மீது கடும் விமர்சனங்களை உண்டாக்கியது.
யார் இந்த அருண்?
இந்த நிலையில், தமிழக காவல்துறை மீதும் எதிர்க்கட்சிகளும், அரசியல் விமர்சகர்களும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிடம் மாற்றப்பட்டு, சென்னையின் புதிய காவல் ஆணையராக அருண் ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.
அருண் அடிப்படையில் பொறியியல் பட்டதாரி ஆவார். இவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துள்ளார். பின்னர், 1998ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று காவல்துறை அதிகாரி ஆனார். ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்ற பிறகு நாங்குநேரி, தூத்துக்குடியில் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார்.
பதவிகள்:
அங்கு திறம்பட பணியாற்றிய அருண் கரூர் மாவட்ட எஸ்.பி.யாக முதன்முதலில் நியமிக்கப்பட்டார். பின்னர், கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் மாவட்ட எஸ்.பி.யாகவும் அவர் நியமிக்கப்பட்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அனுபவங்களை பெற்ற பிறகு, அவர் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் முக்கிய நகரமான அண்ணாநகரின் துணை ஆணையராக பதவி உயர்வு பெற்றார்.
பின்னர், பரங்கிமலை துணை ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தமிழ்நாடு குற்றப்புலனாய்வுத்துறை எஸ்.பி.யாகவும் பதவி வகித்துள்ள அருண், 2012ம் ஆண்டு டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றார். பின்னர், திருச்சி டி.ஜ.ஜி.யாக பணியாற்றினார். சென்னை போக்குவரத்து வடக்கு மண்டல, சட்டம் ஒழுங்கு தெற்கு மண்டல இணை ஆணையராக பதவி வகித்த அருண், கடந்த 2106ம் ஆண்டு ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு:
இதையடுத்து, அவர் தமிழ்நாட்டின் மத்திய பகுதியான திருச்சி போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். பின்னர், சென்னை காவல்துறை கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்ட அவர், 2021ம் ஆண்டு திருச்சி போலீஸ் கமிஷனராக மீண்டும் நியமிக்கப்பட்டார். பின்னர், தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு 2022ம் ஆண்டு கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றார். இதையடுத்து, ஆவடி மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, கடந்தாண்டு சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். இந்த சூழலில், ஆம்ஸ்ட்ராங் கொலை அரங்கேறியதால் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு அவருக்கு பதில் அருண் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை போக்குவரத்தின் கூடுதல் ஆணையாளராக அருண் இருந்த போது, டிராபிக் சிக்னல்களில் ஒளிரும் விளக்குகளை அறிமுகப்படுத்தியது, சி.சி.டி.வி.க்கள் மூலம், மஞ்சள் கோட்டை தாண்டு வாகனங்களைக் கண்டுபிடித்து, நோட்டீஸ் அனுப்புவதை அறிமுகப்படுத்தியது என பல நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.
கன்னியாகுமரி, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் எஸ்.பி.யாக இருந்த போது, சட்டம் ஒழுங்கைக் கட்டுக்குள் வைத்திருந்தவர் என காவல்துறையினர் கூறுகின்றனர். ஆவடி போலீஸ் கமிஷ்னராக இருந்த போது, அங்குள்ள கட்டப்பஞ்சாயத்துகளுக்கு முடிவு கட்டியவர். ரவுடிகள் வேறு மாவட்டங்களுக்கு இடம்பெயர காரணமாக இருந்தார் எனவும் காவல்துறையினர் புதிய காவல் ஆணையர் அருண் பற்றி சான்றிதழ் கூறுகின்றனர்.