சென்னையில் நடைபெற்ற ஆம்ஸ்ட்ராங் கொலை தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், சென்னை மாநகரத்தின் புதிய காவல் ஆணையராக அருண் நியமிக்கப்பட்டள்ளார்.
சென்னைக்கு புதிய போலீஸ் ஆணையர்:
இதுதொடர்பாக, தமிழக உள்துறை செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது,
சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக பதவி வகித்து வரும் அருண் ஐ.பி.எஸ்., சென்னை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஐ.பி.எஸ். பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு சென்னை காவலர் பயிற்சி கல்லூரி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை, தலைமையக ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வதம் பணியிடம் மாற்றப்பட்டு சென்னை, சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை:
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி தனது கட்சி அலுவலகம் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 8 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.
மேலும் இதுகுறித்து அப்போதைய காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் கொடுத்தார். அதில், இதில் அரசியல் பின்னணி இல்லை எனவும் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் விளக்கம் அளித்தார்.
மாயாவதி சரமாரி விமர்சனம்:
ஆனால் எதிக்கட்சிகள் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு குறித்து கடுமையாக விமர்சித்தன. ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு என அரசியல் கட்சி தலைவர்கள் முதல் சாதாரண குடிமகன் வரை கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் ஆம்ஸ்ட்ராங்கின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என குறிப்பிட்டார். இது தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு ஒரு பின்னடைவாக அமைந்துள்ளது. இந்நிலையில்தான் தமிழக அரசு இந்த அதிரடி மாற்றத்தை கையில் எடுத்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ளார்.