காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் (Disha) மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் மற்றும் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர். டி.ஆர்.பாலு அவர்கள் தலைமையில் இன்று  நடைபெற்றது. 

 



 இக்கண்காணிப்பு குழு கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய் துறை, சுகாதார துறை, கல்வித்துறை, வேளாண்மைத்துறை, சமூக நலத்துறை, மகளிர் திட்டம், பிற துறைகளில் மத்திய அரசு பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், ஜல்ஜீவன் மிஷன், தூய்மை பாரத இயக்கம், பாரத மந்திரி கிராம சாலைகள் திட்டம், பாராளுமன்ற உள்ளூர் தொகுதி மேம்பாடு திட்டம், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், தேசிய சுகாதார இயக்கம், ஒருங்கிணைக்கப்பட்ட மின் மேம்பாட்டு திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம், தேசிய பயிர் காப்பீட்டு திட்டம், தேசிய நுண்ணீர் பாசன திட்டம், தேசிய வேளாண்மை சந்தை, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், பெண் குழந்தைகளை காப்போம் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா போன்ற திட்டப்பணிகளில் தற்போது வரை மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர்  விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.



இதன்பின் செய்தியாளரிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும் புதிய கட்டமைப்பு தேவைப்பட்டதால் பரந்தூரில் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்கப்படுகிறது. இதில் முக்கியமாக கருதப்படும் சாலை கட்டமைப்பு வசதி குறித்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு குறித்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. விமான நிலையம் அமைய உள்ள இடத்தில் நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் பொதுமக்கள் எதிர்ப்பு என்பது இருக்கத்தான் செய்யும் எனவும், பாரம்பரியமாக வாழ்ந்து வருவதால் இப்பிரச்சனை நிலவுதாகவும்,  அதற்கு உரிய தீர்வு காணப்படும். மேலும் பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டம் சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் திட்ட செயல்பாட்டின் வழிமுறைகளும் முறையாக பின்பற்றி மிக விரைவில் இத்திட்டம் செயல்படும் என தெரிவித்தார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம் சுதாகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி,  செல்வேந்திரன் மற்றும் மாவட்டத்தின் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர்,  சி வி எம் பி எழிலரசன், கு.செல்வப் பெருந்தகை மற்றும் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.