சென்னை பசுமை விமான நிலையம் (Parandur Airport Protest)


சென்னையில் இரண்டாவது விமான நிலையத்திற்காக பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு மற்றும் அதை ஒட்டியுள்ள மொத்தம் 13 கிராமங்களில் இருந்து சுமார் 4800க்கும் அதிகமான ஏக்கர் பரப்பிலான நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த திட்டத்திற்கான மதிப்பு சுமார் 20,000 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 3000 ஏக்கர் அளவிற்கு, பட்டா நிலங்களாகவும், மீதம் உள்ள நிலங்கள் அரசு நிலமாகவும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு ஆகிய கிராமங்களில் பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான நிலையம் அமைய உள்ள பகுதியில், ஏரி, குளம், கால்வாய் என ஏராளமான நீர்நிலைகள் உள்ளன. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.





பல்வேறு கட்ட போராட்டங்கள்


ஓர் ஆண்டாக கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். உண்ணாவிரதப் போராட்டம் , மொட்டை அடித்து பிச்சை எடுக்கும் போராட்டம், ஏரியில் இறங்கி போராட்டம், தினமும் இரவு நேரப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களை ஈடுபட்டு வந்தனர். ஒரு கட்டத்தில் கிராம மக்கள் தலைமைச் செயலகத்தை நோக்கி நடை பயண போராட்டமும் அறிவித்து, அரசு பேச்சுவார்த்தைக்கு பிறகு அதை கைவிட்டனர். 


சுதந்திர தின விழா





நாளை நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தை புறக்கணிக்க உள்ளதாக வெளியான அறிவிப்பை தொடர்ந்து அக்கிராம மக்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். சுதந்திர இந்தியாவின் 77வது சுதந்திர தின விழா நாளை இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் சுதந்திர தின நாள் விழாவை ஒட்டி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தி அதில் அரசு வழிகாட்டி நெறிமுறைகள் பின்பற்றி கூட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டது.

 



 

கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

 

நாளை நடைபெற உள்ள சிறப்பு கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து வீடுகள் தோறும், கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்த உள்ளதாக, ஏகனாபுரம்  போராட்டக் குழு அறிவிப்பு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, இன்று கிராம மக்களுடன் அப்பகுதியை ஆய்வு மேற்கொண்டும் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இறுதியாக போராட்டக் குழுவினர், திட்டமிட்டபடி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும், கிராம சபை கூட்டம், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட புறக்கணிக்க திட்டமிட்டுள்ளபடி நடக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.


 

கிராம மக்கள் சொல்வது என்ன ?

 

இதுகுறித்து கிராம மக்கள் தெரிவித்ததாவது:  மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோளை ஏற்று பேரணியை மட்டும் கைவிடுவதாக எதிர்ப்பு குழுவினர் தெரிவித்தனர்.  மற்றபடி கிராம சபை புறக்கணிப்பு மற்றும் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம்   ஆகியவை நடைபெறும்.  என தெரிவித்துள்ளனர்