வடகிழக்கு பருவமழை துவங்கியதில் இருந்து தமிழ்நாட்டில், அதிக அளவு கனமழையானது பெய்து வருகிறது. வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு, முக்கிய ஆறாக விளங்கி வரும் பாலாற்றில், கனமழை எதிரொலியாக தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதன் காரணமாக பாலாற்றில் இருக்கும், தரை பாலங்கள் சில  மூழ்கியுள்ளது. 



 

வெள்ளப்பெருக்கு

 

திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வந்த நிலையில், ஆங்காங்கே காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஆம்பூரில் இருந்து பச்சகுப்பம் வழியாக குடியாத்தம் செல்லும் தரைப்பாலத்தில், பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மூழ்கடித்துள்ளது.



 

மூன்று தடுப்பணைகள் நிரம்பியது

 

 

அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் பாலாற்றிலும், தண்ணீர்  சென்று கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு  பாலாற்றில் கட்டப்பட்ட,  வயலூர், பழைய சீவரம்  மற்றும் ஈசூர் - வள்ளிபுரம் ஆகிய மூன்று தடுப்பணைகளும் முழுமையாக நிரம்பி வழிந்து உள்ளது. இந்த மூன்று தடுப்பணைகளையும் நிரம்பி கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.



 

செய்யாற்றிலும் வெளியேறும் நீர்

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில், உள்ள செய்யாற்றில் தொடர்ந்து வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. இந்தச் செய்யாறு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருமுக்கூடல் என்ற பகுதியில் பாலாற்றில் கலக்கிறது. இதன் காரணமாக பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.  அதிக நீர் வரத்து காரணமாக பாலாற்றிலிருந்து அதிகளவு தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது.



 

வாயலூர் தடுப்பணை

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள வாயலூர் தடுப்பணைக்கு தொடர்ந்து தண்ணீர் அதிகரித்து வருகிறது. பாலாற்றில் இருக்கும் கடைசி தடுப்பணை வாயலூர் தடுப்பணை மட்டுமே,  இதிலிருந்து வெளியேறும் நீர் நேரடியாக கடலில் கலக்கும். சுமார் நேற்று மாலை வரை வயலூர் தடுப்பணையிலிருந்து, சுமார் 35 ஆயிரம் கனஅடி நீர் வெளியேறியது. இன்றைய நிலவரப்படி வாயலூரில் வினாடிக்கு 30,320 கன அடி நீர் பாலாற்றில், இருந்து கடலில் கலக்கிறது‌. ஒரு நாளைக்கு 2.6 டி.எம்.சி., தண்ணீர்  கடலில் கலக்கிறது‌ இந்த குறிப்பிடத்தக்கது.



 

விவசாயிகள் கோரிக்கை

 

பாலாற்றில் புதியதாக மூன்று தடுப்பணை கட்டியதால், பாலாற்றில் கடந்த ஒரு ஆண்டாக தண்ணீர் இருக்கிறது. தொடர்ந்து தண்ணீர் கடலில் கலக்காமல் இருக்க கூடுதலாக தடுப்பணைகளை கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

போக்குவரத்து முடக்கம்.


 

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூரில் இருந்து இரும்புலி சேரி செல்லும் பாலாற்று மேம்பாலம் கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த பெரும் மழை வெள்ளத்தில் ஒரு கிலோமீட்டர் பாலம் பாலாற்றில், அடித்து செல்லப்பட்டது.  இதனால் இரும்புலிசேரி,  சின்ன எடையாத்தூர்,  அட்ட வட்டம்,  சாமியார் மடம், சேவூர் ஆகிய 5 கிராம மக்களுக்கு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.  இதனால் பள்ளி மாணவர்களும் வேலைக்கு செல்பவர்களும் மருத்துவமனை மற்றும் அவசிய தேவைகளுக்கு வெளியில் செல்பவர்களும் செல்ல முடியாமல் 3 கிலோ மீட்டரில் செல்ல வேண்டிய பாதை சுமார் 15 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உருவாகியது.



 

அதனால் மாவட்ட நிர்வாகம் பார்வையிட்டு பாலாற்றின் குறுக்கே சாலை அமைத்து, குழாய்களைக் கொண்டு தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது. தொடர்ந்து ஆண்டு தோறும் பெய்து வரும் மழையால் கடந்த 7 ஆண்டுகளாக மழைக்காலங்களில் தற்காலிக பாலம் சிதிலமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்படுவது வழக்கமாகி வருகிறது. எனவே தமிழக அரசு உடனடியாக உடைந்த மேம்பாலத்தை அகற்றி புதிய மேம்பாலம் கட்டி தர  முன்வர வேண்டும் என்று பகுதி மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.