அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டுமென்ற கோரிக்கை குறித்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியின் கருத்தை அறிந்து உத்தரவு பிறப்பிப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
பொதுக்குழுவை நடத்திக்கொள்ளலாம்:
ஜூலை 11 ஆம் நாள் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவுக்கு தடை விதிக்கக்கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால், சட்டப்படி பொதுக்குழுவை நடத்திக்கொள்ளலாம், விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து ஜூலை 11ஆம் நாள் அதிமுக பொதுக்குழு நடத்தப்பட்டு இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்தெடுக்கப்பட்டார்.
வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் !
இந்த உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் எனவும், வழக்கை 2 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டுமெனவும் தனி நீதிபதிக்கு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு நாளை பிற்பகல் 2:15 மணிக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த நிலையில், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, கடந்த ஜூலை 11 ஆம் நாள் பிறப்பித்த உத்தரவில், பன்னீர்செல்வம் குறித்து தேவையில்லாத கருத்துக்களை தெரிவித்துள்ளதால், பொதுக்குழு தொடர்பான வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தரப்பில் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரிக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் குறித்து ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் தலைமை நீதிபதி முன்பாக வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் ஆஜராகி முறையீடு செய்தார். அதனை கேட்ட் தலைமை நீதிபதி, வழக்கை ஒரு நீதிபதியிடம் இருந்து மற்றொரு நீதிபதிக்கு மாற்றுவதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்தார். இருப்பினும் இருவரின் கடிதங்களையும், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியுடன் ஆலோசித்து, அவரது கருத்தையும் அறிந்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்