கொல்கத்தாவில் உள்ள ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்தது. இந்த ரயிலானது ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நேற்று இரவு 7 மணியளவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி அருகில் செல்லும் மற்றொரு தண்டவாளத்தில் விழுந்தது. அடுத்த சில நிமிடங்களில் அதே வழித்தடங்களில் வந்த யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் ரயிலும், சரக்கு ரயில் ஒன்றும் தடம் புரண்ட பெட்டிகள் மீது விபத்துக்கசென்றுள்ளனர். இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் உடனடியாக விரைந்தனர்.





உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்பு பணிகள் 12 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. தேசிய, மாநில மீட்பு படையினருடன் விமானப்படையினரும் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். விபத்து நடைபெற்றது இரவு நேரம் என்பதால் கடும் சவால் ஏற்பட்டது. ஆனால் விடிய விடிய நடந்த மீட்பு பணியில் இதுவரை 230க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். A1, A2, B2, B3, B4, B5, B6, B7, B8, B9 ஆகிய பெட்டிகள் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த ரயிலில் சென்னைக்கு வர 867 பேர் முன்பதிவு செய்திருந்தனர். விபத்தில் சிக்கிய பயணிகள் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள தமிழ்நாடு அரசு சார்பிலும், ரயில்வே துறை சார்பிலும் அவசரகால எண்கள் அறிவிக்கப்படுள்ளது. 

 

இந்தநிலையில் நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் ஒரிசா முதல்வரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு விபத்து குறித்து கேட்டறிந்தார். இதனை அடுத்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும் , பாதிப்படைந்தவர்களை மீட்கவும் தமிழ்நாடு அரசு சார்பில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் தலைமையில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் ஒடிசா சென்றுள்ளனர். இந்த நிலையில் முன்னதாக சென்னை விமான நிலையம் வந்த உதயநிதி ஸ்டாலின் செய்தியாளரை சந்தித்த பொழுது தெரிவித்ததாவது.

 

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின் அடிப்படையில் ஒடிசா செல்ல இருக்கிறோம். பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கை சரியாக தெரியவில்லை ஆனால் வருந்தத்தக்க செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தொடர்ந்து ஒடிசா அரசிடம் அதிகாரிகள் பேசிக் கொண்டுதான் இருக்கின்றனர். மருத்துவமனைகளும் தயார் நிலையில் உள்ளது. என தெரிவித்தார். அமைச்சர் மற்றும் அதிகாரி குழுவினர் நான்கு நாட்கள் வரை ஒரிசாவிலேயே அங்கிருந்து மீட்டுப் பணிகளை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.