புத்தாண்டு திருநாளான இன்று உலகம் முழுவதும் மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அதே போல சென்னையிலும் நேற்று இரவு முதல் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இரவு நேரங்களில் கேளிக்கை விடுதிகள், பீச் மற்றும் பொது இடங்களில் கூடி மக்கள் புத்தாண்டை கொண்டாடினர். கேளிக்கை விடுதிகள் இயங்க இரவு 1 மணி வரை அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. மெரினா பீச்சில் நேற்று மாலை முதலே கூட்டம் சேர்ந்த நிலையில் அசம்பாவிதங்கள் நடைபெறா வண்ணம் காவல் துறையினர் அங்கி குவிக்கப்பட்டனர். இருப்பினும் புத்தாண்டு தொடங்குவதற்கு முன்பே இரவு மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப் பட்டனர். 



பாதுகாப்பு பணிகள்


சாலைகளில் போக்குவரத்து காவல் துறையினர் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு முழு வீச்சில் பாதுகாப்பு பணிகள் நடைபெற்றன. நேற்றிரவு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் துறையினர் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்ட நிலையில், குடித்து விட்டு வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 360 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தொடர்புடைய செய்திகள்: Yogi Babu: மாஸ் கிரிக்கெட் பயிற்சி... தோனி, கோலிக்கு சவால்விடும் யோகி பாபு! இதுதான் விஷயமா?


932 வாகனங்கள் பறிமுதல்


அதேபோல போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், 572 வாகனங்களை என மொத்தமாக 932 வாகனங்கள் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த 25 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை இதர போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், 694 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து அனைத்து வாகனங்களும் நாளை உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்படுகிறது.






வடபழனி முருகன் கோவிலில் திரண்ட கூட்டம்


இது போன்ற பிரச்னைகள் சிறிது சிறிதாய் இருந்தாலும் மக்கள் புத்தாண்டை சிறப்பாகவே கொண்டாடி வருகின்றனர். இரவு நேரத்தில் சாந்தோம், பெசன்ட் நகர், லஸ் போன்ற பிரபலமான சர்ச்களும் உட்பட அனைத்து சர்ச்சிலும் வழிபாடுகள் நடைபெற்றன. அதே போல காலை விடிந்ததும் பல கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப் பட்டன. அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புத்தாண்டு நல்ல ஆண்டாக அமைய வேண்டிக் கொண்டனர். குறிப்பாக வடபழனி முருகன் கோயிலில் வழிபடுவதற்கு மக்கள் கூட்டம் வெகுவாக கூடியது. கட்டுக்கடங்காத பக்தர்கள் புத்தாண்டிற்கு வடபழனி முருகர் கோவிலுக்கு வருவது வழக்கம்தான். அதே போல இந்த ஆண்டும் திரளான பக்தர்கள் கூட்டம் வந்திருந்தது. அந்த வீடியோவை ஏஎன்ஐ வெளியிட்டுள்ளது.