மெரினா கடற்கரை சென்னை மக்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்த ஒன்று. கடற்கரை சாலையில் சைக்கிள் ஓட்டுவது நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் வாக்கிங் செல்வது காலை சூரிய உதயம் பார்ப்பது சென்னை மக்களின் அன்றாடப் பொழுதுபோக்குகளில் ஒன்று. தற்போது மெரினா கடற்கரைக்குச் செல்பவர்களுக்கு மேலும் ஒரு ரெஃப்ரெஷான செய்தி காத்திருக்கிறது. மெரினாவில் அவ்வபோது ஏற்படும் நெட்வொர்க் சிக்கல்களைப் பற்றி அவர்கள் இனி கவலைப்பட வேண்டியதில்லை.
சென்னை பெருநகர மாநகராட்சி கடற்கரை முழுவதும் தற்போது வைஃபை இணைப்பை வழங்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த வசதியை விரைவில் உருவாக்க சென்னை மெட்ரோ நகர நிர்வாகம் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளது.
சென்னை மாநகர நகர மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் எம்.மகேஷ் குமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் சமீபத்தில் கடற்கரை முழுவதும் வைஃபை ஹாட்ஸ்பாட்களை உருவாக்கும் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் கலந்துரையாடினர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்: கடற்கரையில் வைஃபை ஹாட்ஸ்பாட்களை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த வசதி விரைவில் பொதுமக்களுக்கு கிடைக்கும். இந்த திட்டத்தை உடனடியாக மேற்கொள்ள மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இருப்பினும் தற்போது ஆரம்ப நிலை பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது!" என்றார்.
லாக்டவுன் காலத்தில் அல்லது இன்னமும் வொர்க் ஃப்ரம் ஹோம் முறையைக் கையாண்டு வரும் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் இனி கடற்கரைக்குச் சென்று காற்று வாங்கியபடியே வேலை செய்யலாம்.
முன்னதாக,
மெரினா கடற்கரை முதல் கோவளம் கடற்கரை வரையிலான கடற்பரப்பினை 100 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது.
சென்னை மெரினா கடற்கரை முதல் கோவளம் கடற்கரை வரையிலான 30 கிலோ மீட்டர் அளவிலான கடற்பரப்பினை மேம்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது. மேலும் தமிழ்நாடு அரசு இந்த திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடும், 17 பேர் கொண்ட மறுசீரமைக்கும் குழுவையும் அமைத்துள்ளது. சென்னை கடற்கரை பகுதி மறுசீரமைப்பு மற்றும் புத்துயிர் திட்டத்தின் கீழ் சிறப்பு நோக்கு நிறுவனம் உருவாக்க தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு வீட்டு வசதி வாரிய செயலர் தலைமையில் மறுசீரமைக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்குவது மெரினா கடற்கரை. முக்கிய சுற்றுலா தளமாக திகழும் மெரினா கடற்கரைக்கு தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இதனால், மெரினா கடற்கரையில் நடைபாதைகள், அணுகுசாலைகள், பூங்காக்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், சாலையில் இருந்து கடற்கரைக்கு சென்று கடலின் அழகை ரசிப்பதற்கு மணலில் நடந்து செல்வது முதியவர்களுக்கும், உடல்நலம் முடியாதவர்களுக்கும் மிகுந்த சிரமமாக இருந்து வந்தது. மாற்றுத்திறனாளிகள் கடற்கரைக்கு செல்வது மிகவும் கடினமான ஒரு விஷயமாகவே இருந்தது. இதுதொடர்பாக, பலரும் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த காரணத்தால் மெரினா சாலையில் இருந்து கடற்கரைக்கு செல்வதற்கு நடைபாதைகள் அமைக்கப்பட்டன.
இந்த நடைபாதை தற்போது தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த தற்காலிக நடைபாதையில் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்காக சிறப்பு வாகனங்களும் மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நடைபாதை பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக கடற்கரைக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுபோன்று அனைத்து சுற்றுலா தளங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்து தர வேண்டும் என்றும் பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்