அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், சில மாதங்களில் பெய்ய வேண்டிய மழை, சில மணி நேரங்களிலேயே கொட்டித் தீர்த்ததால், வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 82-ஆக உயர்ந்துள்ளது.

வரலாறு காணாத அளவிற்கு பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில், மத்திய கெர் கவுண்ட்டியில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால், டெக்சாசின் தென்-மத்திய பகுதியில் உள்ள குவாடலூப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

சில மாதங்களில் பெய்ய வேண்டிய மழை, சில மணி நேரங்களிலேயே பெய்ததால், இப்படி திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

குவாடலூப் ஆற்றில் இருந்து வெளியேறி தண்ணீர், ஊருக்குள் புகுந்ததால், வீடுகள், வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. சில இடங்களில் வீடுகள் தண்ணீரில் மூழ்கியதையடுத்து, அங்கிருந்தவர்கள் வீடுகளின் மேற்கூரைகளில் தஞ்சமடைந்தனர்.

டெக்சாஸ் மாகாணத்தி கடந்த சில நாட்களாகவே இடி, மின்னலுடன் கூடிய தொடர் கனமழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் புயலும் வீசுவதால், நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாய் காட்சியளிக்கின்றன. இந்த வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளம் காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

உயிரிழந்தோர் எண்ணிக்கை 82-ஆக உயர்வு

இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 82-ஆக அதிகரித்துள்ளது. இதில் 28 குழந்தைகளும் அடக்கம். குவாடலூப் ஆற்றின் கரைப்பகுதியில் இருந்த கிறிஸ்தவ பெண்கள் முகாமான மிஸ்டிக்-கிலிருந்து 10 குழந்தைகள் மற்றும் ஒரு ஆலோசகரும் மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இவர்களுடன் சேர்த்து, மொத்தம் 41 பேர் மாயமாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

தீவிர தேடுதல் / மீட்புப் பணி

தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கால், 82 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமானோர் மாயமாகியும் உள்ளனர். இதனால், அவர்களை தேடும் பணி தீவிமாக நடைபெற்று வருகிறது.

டெக்சாஸில் கோடைகால முகாமிற்கு சென்றிருந்த 700 மாணவிகளில், 20-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களையும், மாயமான பொதுமக்களையும், ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தேடும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளில், மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்பு முகமை ஈடுபட்டு வருகிறது.  இந்த பகுதிகளுக்கு ஏற்கனவே வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருந்தாலும், இந்த அளவிற்கு ஒரு வரலாறு காணாத மழை பெய்து, பெரிய அளவிலான வெள்ளம் ஏற்படும் என யாருமே எதிர்பார்க்கவில்லை என கூறப்படுகிறது.

வானிலை கணிப்பை பொய்யாக்கிய மழை

வானிலை முன்னறிவிப்பின்படி, 1 முதல் 3 அங்குல அளவிற்கு மழை பெய்யும் என கூறப்பட்டிருந்த நிலையில், சில பகுதிகளில் 7 அங்குல அளவிற்கு மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாகவே, வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கூடுதலான மழையும், அதன் காரணமாக வெள்ளப்பெருக்கு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக நேற்று அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.