கடற்கரைக் கோவில் என்னும்  அதிசயம்


சென்னை அருகில் மாமல்லபுரத்தில் வங்காள விரிகுடா கடற்கரையை ஒட்டி  மாமல்லபுரம் கடற்கரை கோயில் அமைந்துள்ளது. கிபி எட்டாம் நூற்றாண்டில் (700-728)  கருங்கற்களைக் கொண்டு கட்டுமானம் செய்யப்பட்ட கோயிலாகும். மாமல்லபுரக் கடற்கரையில் அமைந்துள்ள, கடற்கரைக் கோயில்கள் என அறியப்படுகின்ற கோயில்கள் அனைத்தும் இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவனால் கட்டபப்பட்டவயே. ஒற்றைக்கல் யானை, அர்ஜுனன் தபசு, கண்ணன் கோவர்த்தன மலையைத் தூக்குதல், மகிஷாசுரமர்த்தினி மண்டபம் ஆகியன இவற்றில் குறிப்பிடத் தகுந்தவை.


ஏழு கோவில்கள்


மார்க்கோபோலோ மற்றும் அவருக்குப்பின் வந்த ஐரோப்பிய வணிகர்கள் இந்த இடத்தை ஏழு அடுக்கு ஸ்தூபிகள் என்று அழைத்தனர். அந்த ஏழு அடுக்கு ஸ்தூபிகளில் ஒன்று இந்த கடற்கரை கோயில் என்று நம்பப்படுகிறது. இக்கோயிலானது அவர்களது கப்பல்களுக்கு ஒரு கலங்கரை விளக்கம் போல செயல்பட்டிருக்கலாம் எனக் கூறுகின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். மீதமுள்ள ஆறு கோவில்கள் மற்றும் கட்டுமானங்களை , கடலுக்குள்ளே பலமுறை பார்த்ததாக மீனவர்களும் சிலர் தெரிவித்து வருகின்றனர். கடல் அரிப்பு மற்றும் கடல் உள்வாங்கும் போது சில கட்டிட அமைப்புகள் மகாபலிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார மீனவ கிராமங்களில் வெளியே தெரியும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்றுள்ளன.



மகாபலிபுரத்தில் கடலரிப்பு


மகாபலிபுரத்தில் கடலானது  வருடம் ஒன்றுக்கு சுமார் 0.53 மீட்டர், கடல் அரிப்பு ஏற்படுவதாக ஆய்வு முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளன. கோவில்கள் ஆண்டிலிருந்து கணக்கிட்டு பார்த்தால் 1500 வருடங்களுக்கு முன்பு கடல் பகுதி 800 மீட்டருக்கு முன்னாள் நிலப்பரப்பு இருந்திருக்கும். அதுபோன்ற நிலப்பரப்பில் ஏராளமான கோவில்கள் மற்றும் கட்டுமானங்கள் இருந்திருக்கலாம் என்பது அறிஞர்களின் கருத்து.


கடலில் ஆய்வு


இக்கோயிலுக்கு அருகே உள்ள கடலுக்குள் கல் தூண்கள், சுவர்கள் உள்ளிட்டவை இருப்பது தெரியவந்தது. அவற்றை தேசிய கடல் ஆராய்ச்சி மையம் கடந்த 2017-ஆம் ஆண்டு ஆய்வு செய்தது. சுவர்கள், தூண்கள் மீதிருந்த படிவுகளில் இருந்து மாதிரிகள் எடுத்து அவை ரேடியோ கார்பன் டேட்டிங் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. கடற்கரை கோயிலில் இருந்து கடலில் சுமார் 500 மீட்டர் தொலைவில் 3 இடங்களில் 4 முதல் 6 மீட்டர் ஆழத்தில் இருந்து இந்த மாதிரிகள் எடுக்கப்பட்டிருந்தன.



இதில் ஒரு மாதிரி கி.பி 35 ஆம் ஆண்டு அதாவது முதல் நூற்றாண்டில் மூழ்கியதாக இருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் இக்கட்டுமானங்கள் பல்லவர் காலத்திற்கும் முந்தையவை என தெரியவருகிறது. மற்றொரு மாதிரி 14-ஆம் நூற்றாண்டையும் 3-வது மாதிரி 19-ஆம் நூற்றாண்டையும் சேர்ந்தவையாக இருக்கலாம் என ஆய்வறிக்கையில் கூறப்படுகிறது.


1-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த படிமம்


கடலுக்குள் உள்ள 14ஆம் நூற்றாண்டு கட்டுமான கற்கள், கடற்கரை கோயிலில் உள்ள கற்களை ஒத்திருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் முதலாம் நூற்றாண்டை சார்ந்தவை என கருதப்படும் கற்கள் மற்றவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடல் அரிப்பு உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் இந்த கட்டுமானங்கள் கடலுக்கு அடியில் சென்றிருக்கலாம் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இந்த ஆய்வறிக்கை தமிழக வரலாறு குறித்த புதிய தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



சமீபத்தில் கூட கடல் அரிப்பின் காரணமாக சில கட்டுமானங்கள் வெளியே தெரிந்தன, மேலும் நாணயம் ஒன்றும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.


முழு கட்டுரையைப் படிக்க கிளிக் செய்யுங்கள் " மகாபலிபுரத்தில் கடல் அரிப்பு..வெளியே தெரிந்த கோவில் கோபுரம் மற்றும் கட்டுமானங்கள்..முழு பின்னணி என்ன?


தொல்லியல் ஆர்வலர்கள் வேண்டுகோள்


மகாமல்லபுரம், கடல் மல்மை, ஜன நாதபுரம், மல்லாபுரி, மஹாபலிபுரம், மாவேலிவரம், மாவலிபுரம், என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும், இப்பகுதியில் பல ஆயிரக்கணக்கான தமிழர்களின் கலை அதிசயத்தை தன்னுள் அடக்கி வைத்திருக்கிறது கடல், கடந்த சில வருடங்களாகவே தமிழ் நாட்டு மக்களிடையே அகழ்வாராட்சி குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு வந்துள்ள நிலையில், மகாபலிபுரத்தில் உள்ள மர்மத்தையும் களைய வேண்டும் என்பதே தொல்லியல் ஆய்வாளர்களின் கோரிக்கையாக உள்ளது.