கடற்கரைக் கோவில் என்னும்  அதிசயம்


சென்னை அருகில் மாமல்லபுரத்தில் வங்காள விரிகுடா கடற்கரையை ஒட்டி  மாமல்லபுரம் கடற்கரை கோயில் அமைந்துள்ளது. கிபி எட்டாம் நூற்றாண்டில் (700-728)  கருங்கற்களைக் கொண்டு கட்டுமானம் செய்யப்பட்ட கோயிலாகும். அக்காலத்தில் இந்த இடம் ஒரு துறைமுகமாக இருந்தது. அப்போது இந்த இடத்தை இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவன் ஆண்டு கொண்டிருந்தார். இக்கடற்கரைக் கோயிலை 1984- இல் யுனெஸ்கோ நிறுவனத்தால், உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.




மாமல்லபுரக் கடற்கரையில் அமைந்துள்ள, கடற்கரைக் கோயில்கள் என அறியப்படுகின்ற கோயில்கள் அனைத்தும் இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவனால் கட்டபப்பட்டவையே. ஒற்றைக்கல் யானை, அருச்சுனன் தபசு, கண்ணன் கோவர்த்தன மலையைத் தூக்குதல், மகிஷாசுரமர்த்தினி மண்டபம் ஆகியன இவற்றில் குறிப்பிடத் தகுந்தவை.


ஏழு கோவில்கள்


மார்க்கோபோலோ மற்றும் அவருக்குப்பின் வந்த ஐரோப்பிய வணிகர்கள் இந்த இடத்தை ஏழு அடுக்கு ஸ்தூபிகள் என்று அழைத்தனர். அந்த ஏழு அடுக்கு ஸ்தூபிகளில் ஒன்று இந்த கடற்கரை கோயில் என்று நம்பப்படுகிறது. இக்கோயிலானது அவர்களது கப்பல்களுக்கு ஒரு கலங்கரை விளக்கம் போல செயல்பட்டிருக்கலாம். மீதமுள்ள ஆறு கோவில்கள் மற்றும் கட்டுமானங்களை , கடலுக்குள்ளே பலமுறை பார்த்ததாக மீனவர்களும் சிலர் தெரிவித்து வருகின்றனர். கடல் அரிப்பு மற்றும் கடல் உள்வாங்கும் போது சில கட்டிட அமைப்புகள் மகாபலிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார மீனவ கிராமங்களில் வெளியே தெரியும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்றுள்ளன.




கரை ஒதுங்கிய கட்டுமானங்கள்


இந்நிலையில் மாமல்லபுரம் கடற்கரை கோவில் வடபகுதி மீனவர்கள் குடியிருப்பு பகுதியில்  கடலோரத்தில் நேற்று மாலை கடல் உள்வாங்கியது. அப்போது பழங்காலத்து கோயில் கல்கலசம், தூண்கள், செங்கல்கள் ஒதுங்கி இருந்தது. கடலில் அடித்து செல்லப்பட்ட 6 கோயில்களில் ஒன்றாக இருக்கலாம் என  அப்பகுதி மீனவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இதனால் நேற்று காலையில் இருந்தே உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் அப்பகுதிக்கு சென்று கடலில் மூழ்கிய கோயிலா இது என ஆச்சர்யத்துடன் பார்த்து வருகிறார்கள்.




அப்பகுதி மக்கள் சொல்வது என்ன?


இதுகுறித்து அப்பகுதி மீனவர் ராஜேஷ் நம்மிடம் தெரிவிக்கையில், கடந்த 2 நாட்களாக கடல் அரிப்பு காரணமாக , மணல்கள் அப்பகுதியிலிருந்து நீங்கியதால் கடற்கரை கோவிலின் பின்புறத்தில் சில கட்டமைப்புகள் வெளியே தெரிய தொடங்கியது. குறிப்பாக செங்கற்கள் மற்றும் கோவில் தூண்கள் போன்றவை வெளியே தெரிந்தன. அதேபோல் சிறியதாக கலசம் போன்ற அமைப்புடைய,  சிற்பம் ஒன்றும் வெளியே தெரிந்தால் இது கோவிலாக இருக்கலாம் என,  அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்து விட்டுச் செல்கின்றனர்.




மேலும்  அப்பகுதியில்  பானை ஓடுகள் உள்ளிட்டவற்றை அப்பகுதி பொதுமக்கள் எடுத்துள்ளனர். மேலும் ஒரு நாணயமும் இப்பகுதியில் கிடைத்துள்ளது.  அவ்வப்போது இப்பகுதியில் கடலரிப்பு ஏற்பட்டாலும், இந்த அளவிற்கு கட்டுமானங்கள் முழுமையாக வெளியே தெரிந்ததில்லை. இன்னும் சில நாட்களில் மீண்டும் அவ்விடம் கடல் நீரால், மறைந்து விடுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது என்கிறார் மீனவர் ராஜேஷ்.


ஆய்வாளர்கள் சொல்வதென்ன?


இதுகுறித்து நாணய ஆய்வாளர் மன்னர் மன்னரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது,   மகாபலிபுரத்தில் தொடர்ந்து பல ஆண்டுகாலம் வணிகம் நடைபெற்று வந்துள்ளது. பல்லவர்கள் ,அவர்களை தொடர்ந்து பல மன்னர்கள் மகாபலிபுரத்தை ஆட்சி புரிந்துள்ளனர். இன்றளவும் கடலுக்குள் பல கட்டுமானங்கள் இருந்து வருகின்றன. ஆனால் தற்பொழுது, காணப்பட்டுள்ள கட்டுமானம் குறித்து முறையாக ஆய்வு மேற்கொண்ட பிறகே தெரியவரும் என தெரிவித்தார். அதேபோல் மகாபலிபுரத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பல முறை கடற்கரை ஓரங்களில் பல்லவர்கள் காலத்தை சேர்ந்த நாணயங்கள் கிடைத்துள்ளன. ஆனால் சமீப காலத்தில் அதுபோன்ற நாணயங்கள் கிடைத்ததற்கு தரவுகள் இல்லை, நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு நாணயம் ஒன்று கிடைத்துள்ளது.




நாணயத்தின் புகைப்படத்தை வைத்து பார்க்கும்போது,  ஆர்க்காடு நவாபுகளின் பைசா காசு. இந்த நாணயம் மசூலிப்பட்டணம் அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது. இதனை சென்னையை சேர்ந்த நாணய ஆய்வாளர் இராமன் சங்கரன், உறுதிப்படுத்தியுள்ளார்.  இதனை வைத்து பார்க்கும்போது அப்பகுதி, தொடர்ந்து வணிகம் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லக்கூடிய பகுதியாக இருந்து வந்தது என்பதை அறிய முடிகிறது என தெரிவிக்கிறார்.


தொல்லியல் துறை எடுத்த நடவடிக்கை


இதுபற்றி மாமல்லபுரம் தொல்லியல்துறை அலுவலகத்தில் கேட்டபோது கூறியதாவது, 7-ம் நூற்றாண்டில் மாமல்லபுரத்தை ஆட்சி செய்த மன்னர் ,  7 கோயில்கள் கட்டியதாகவும் அதில் ஒன்று 108 திவ்யதேசங்களில் 63-வது திவ்யதேசமான தலசயன பெருமாள் கோயில் எனவும், 6 கோயில்கள் கடலில் மூழ்கியதாகவும் கூறப்படுகிறது.தற்போது இந்த கலசங்கள், தூண்கள், செங்கல்களை பார்க்கும்போது சுற்றுச்சுவர் கட்டிடம் போன்றும் தெரிகிறது. கோவிலை பாதுகாக்க போடப்பட்ட சேதமடைந்த கற்கள் போன்றும் தெரிகிறது. கடற்கரையில் ஒதுங்கி இருப்பது பழங்கால கோயில்தான் என உறுதியாக இப்போது கூறமுடியாது.




சென்னை தலைமை செயலகத்தில் இயங்கும் தொல்லியல்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து  தொல்பொருள், கல்வெட்டு ஆய்வாளர்கள், சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து கட்டிடக்கலை பேராசிரியர் கொண்ட ஆய்வுக் குழுவினர் வந்து கலசத்தையும், தூண்களையும் ஆய்வு செய்ய உள்ளனர். இதன் பின்னர் இது கோயிலா? சுற்றுச்சுவரா? என்பது தெரியவரும்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.