பொறியியல் மாணவர்களுக்கு மீண்டும் நேரடிக் கலந்தாய்வு நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் கட்டண உயர்வு திரும்பப் பெறப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். 


இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:


’’நீட் தேர்வு முடிந்த பின்னர் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடத்தப்படும். பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்கக்கூடாது என்ற வகையில், கலந்தாய்வுகள் பல்வேறு கட்டங்களாக நடத்தப்படும். 


மீண்டும் நேரடிக் கலந்தாய்வு?


மாணவர்கள் ஆன்லைன் கலந்தாய்வை விரும்பினாலும், அதில் முறைகேடுகள் நடப்பதையும் உணர்ந்திருக்கின்றனர். ஆன்லைன் இணைப்பு வசதி சரியாக இல்லை என்ற குரல்களையும் கேட்க முடிகிறது. இதனால் பள்ளிகளிலேயே கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பதற்கான ஆன்லைன் வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. 


அதேபோல கலந்தாய்வுக்கு உதவ மாநிலம் முழுவதும் 100 இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதுகுறித்துக் கலந்தாலோசனைக் கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். 17ஆம் தேதி மாலை இதுகுறித்து பல்கலைக்கழகங்கள், தனியார் உயர் கல்வி நிறுவனங்கள், மாணவர் பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, அறிவிப்பு வெளியாகும். 




பொறியியல் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க ஏற்கெனவே பாடத்திட்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பாடத்திட்ட மாற்றம் இந்தக் கல்வியாண்டில் இருந்தே நடைமுறைக்கு வரும். 


7.5% இட ஒதுக்கீடு


பள்ளி அளவிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டின்கீழ் மருத்துவ, பொறியியல், பட்டயக் கல்லூரி இடங்களைப் பெற அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. கலந்தாய்வு மூலம் நிரப்பப்படாத இடங்களில், எந்தக் கல்லூரியில் இடங்கள் உள்ளனவோ அதற்கு மாணவர்களே நேரடியாக விண்ணப்பிக்கலாம். அதற்கு விண்ணப்பிக்க வேண்டிய தேதி அவகாசம் நீட்டிக்கப்படும்.


அதேபோல அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்படுவதாக வெளியான சான்றிதழ் கட்டண அறிவிப்பு திரும்பப் பெறப்படும்’’. 


இவ்வாறு அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.


முன்னதாக அண்ணா பல்கலைக்கழகத்தில் 23 வகையான சான்றிதழ்களைப் பெறுவதற்கும், அவற்றில் திருத்தம் செய்வதற்குமான கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டன. குறிப்பாக மதிப்பெண் சான்றிதழ்கள் தொலைந்து விட்டாலோ, சேதமடைந்து விட்டாலோ அதற்கு பதிலாக புதிய சான்றிதழ் வாங்குவதற்கு இதுவரை ரூ.300 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், இப்போது அந்தக் கட்டணம் 10 மடங்கு உயர்த்தப்பட்டது. பிற சான்றிதழ்களின் கட்டணங்களும் குறைந்தது 66% முதல் 400% வரை அதிகரிக்கப்பட்டன. இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண