சென்னை திநகரில் உள்ள நடேசன் பூங்காவில் வாக்கிங் செய்பவர்கள் மற்றும் ஜாக்கிங் செய்பவர்கள் இன்று காலை நல்ல இசையைக் கேட்கின்றனர்.
சென்னை என்றாலே விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. எப்போதும் நம் நினைவுக்கு முதலில் வந்து நிற்பது ட்ராஃபிக். அதை நினைத்தே பலர் எரிச்சல் அடைவதும் உண்டு. இங்கு வந்தாரை வாழவைக்கும் சென்னை என்று சொல்வோரும் உண்டு. போதும்டா சாமி இந்த சென்னை வாழ்க்கை என்று சொல்வோரும் உண்டு. எப்போது விறுவிறுப்புவுக்கு நடுவே பயணம் செய்யும் சென்னை வாசிகள் சற்று சுத்தமான காற்று, அமைதியை பெறுகிறார்கள் அது காலை நேரத்தில் தான்.
எந்த நேரமும் வேலை வேலை என்று இருப்பவர்களுக்கு காலையில் நடக்கும் நடைப்பயிற்சிதான் மனதுக்கு அமைதியையும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தந்து வருகிறது. பெரும்பாலான மேல்தட்டு மக்களும் முதியவர்களும் நடைபயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். காரணம் அவர்கள் பார்க்கும் வேலை அப்படி. உடல் உழைப்பை விட மன அழுத்தம் அதிகம் இருக்கும் வேலையாக இருக்கக்கூடும்.
இப்படிபட்டவர்களுக்கு நடைப்பயிற்சி இரத்த அழுத்தத்தைத் குறைப்பதோடு, இரத்த சர்க்கரை அளவில் உள்ள ஏற்றத்தாழ்வை சரிசெய்யும். ஆஸ்துமா மற்றும் சில புற்றுநோய்களின் வளர்ச்சியையும் தடுக்கும். ஒருவர் தினமும் 30 நிமிடங்கள் நடப்பதன் மூலம் நல்ல மனநிலையை உணர வைக்கும் எண்டோபின்களின் வெளியீடு அதிகரித்து, மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஏற்படுவது குறையும்.
சென்னைவாசிகள் பலர் பீச், பார்க், அமைதியான சாலை போன்ற இடங்களில் வாக்கிங், ஜாக்கிங் போவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அதில், சென்னை தியாகராய நகரில் உள்ள வெங்கட்நாராயணா சாலையில் அமைந்துள்ள நடேசன் பூங்காவிற்கு ஒரு தனி சிறப்பு உண்டு. இந்த பூங்காவில் கீழ்தட்டு மக்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை அனைவரும் இந்த பூங்காவை பயன்படுத்தி வருகின்றனர். நான்கு ஏக்கர் நிலப்பகுதியை உடைய இப்பூங்கா, வேளாண்மைத் துறை அமைச்சர் எ.பி.செட்டி அவர்களால் 1950 ஆம் ஆண்டு செம்டம்பர் 13 ஆம் தேதி மக்களுக்காகத் திறந்து வைக்கப்பட்டது.
தியாகராய நகரின் ‘பசுமைச் சோலை’ என்று அழைக்கப்படும் இப்பூங்கா, பசுமையான மரம், செடி, கொடிகளுடன் நன்றாகப் பராமரிக்கப்படுகின்றன. மக்கள் காலையிலும் மாலையிலும் நடைப்பயிற்சி செய்வதற்கு வசதியான நடைபாதைகள் உள்ளன. புல்வெளிகளில் ஆங்காங்கே இருக்கைகளும் உள்ளன.
இப்பூங்காவிற்கு நடுவில் டாக்டர்.நடேசன் அவர்களின் உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அகன்ற, நீண்ட, துய்மையான நடைபாதைகள், யோகா, தியானம், உடற்பயிற்சி செய்வதற்கு ஏற்ற இயற்கை சூழலுடன் கூடிய அமைதியான இடமாகவும் இப்பூங்கா காணப்படுகிறது. குரோட்டன் செடிகள், அராலிசியே தாவரங்கள், காகிதப்பூ, மயில் கொன்றை, வேம்பு, செம்மயிற்கொன்றை, பனைக்குடும்ப மரங்கள், அரச மரம், தெசுபீசியா முதலான தாவரங்கள் இந்த பூங்காவில் உள்ளன. உடற்பயிற்சிகள் செய்ய, விளையாட்டுப் பயிற்சிகள் செய்ய நல்ல காற்றோட்டமுள்ள, வசதியான, விசாலமான அரங்கங்கள் உள்ளன.
இதனாலேயே இந்த பூங்காவை பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை நடேசன் பூங்காவில் வாக்கிங் செய்பவர்கள் மற்றும் ஜாக்கிங் செய்பவர்கள் நல்ல இசையைக் கேட்டு மகிழ்கின்றனர். அதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.