வங்கக்கடலில் உருவாகிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கடந்த இரண்டு வாரம் கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னையின் பிரதான நகரங்கள் உள்பட அனைத்து பகுதிகளும் வெள்ளக்காடாய் மாறியது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால் சாலைகளில் தேங்கிய மழைநீரை அகற்றுவதில் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் தூய்மை பணியாளர்கள் அகற்றி வந்தனர்.
மேலும், சென்னையில் சில பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி சாக்கடை நீராக மாறிவருகிறது. இந்தநிலையில் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளான கீழ்பாக்கம், தண்டையார் பேட்டை, ஓமந்தூர், ஸ்டான்லி மருத்துவமனை. ராஜீவ் காந்தி உள்பட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கடந்த சில நாட்களாக வயிற்றுப்போக்கு மற்றும் உடல் உபாதைகள் காரணமாக தினசரி 100 க்கு மேற்பட்டோர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அரசு மருத்துமனை மருத்துவர்கள் தெரிவிக்கையில், மழைக்கால நேரங்களில் வயிற்றுப்போக்கு மற்றும் உடல் உபாதைகள் போன்ற மழைக்கால நோய்கள் பரவி வருகின்றனர். சில நேரங்களில் மழைநீரோ, கழிவுநீரோ குடிநீருடன் கலந்துவிடும். அந்த நேரங்களில் மக்கள் அதை பருகுவதால் கிருமிகள் உள்ளேசென்று வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. எனவே எப்போதும் குடிக்கும் நீரை காய்ச்சி குடிப்பது நல்லது.
அதேபோல், சமைக்கும் நேரத்தில் காய்கறிகளை நன்கு தண்ணீரில் சுத்தம் செய்யவேண்டும். அவ்வாறு செய்வது மூலம் வயிற்றுப்போக்கு நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும். வயிற்றுப்போக்கு நேரத்தில் உடலில் உள்ள நீர்சத்துகள் விரைவாக குறையும் . அந்த நேரத்தில் உயிர் காக்கும் நீரான உப்பு கரைசல் நீரை பருக வேண்டும். இதன் மூலம் நீர் இழப்பு தடுக்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து, மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி தெரிவிக்கையில், சென்னையில் வெள்ளநீர் பாதித்த பகுதிகளில் தினசரி 1,062 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றனர். இதில் நேற்று முன்தினம் மட்டும் 23,760 சிகிச்சை பெற்று வருகின்றனர். தோல்வியாதி, வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளுக்கு கவனம் செலுத்தப்படுகிறது.
இந்த பாதிப்புகள் கண்டறியப்பட்ட நபர்களில் வீடுகளில் தண்ணீர் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு ப்ளீச்சிங் பவுடர்கள், மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், குடிநீரை கொதிக்க வைத்து குடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அனைத்து இடங்களிலும் முகாம்கள் அமைக்கப்பட்டு பாதிப்புகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது வரை காலரா போன்ற பாதிப்புகள் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்