காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 ஆவது மெகா தடுப்பூசி முகாம் நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை 500 இடங்களில் நடைபெறுகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அஸ்தகிரி தெருவில் வசித்து வந்தவர் பொம்மை தயாரிப்பு தொழிலாளி ரகு. இவர் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டிருந்த நிலையில், உடல் நலம் சரியில்லாத நிலையில் கடந்த மாதம் 8 ஆம் தேதி உயிரிழந்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரானா தடுப்பூசி முகாமில் உயிரிழந்த ரகு தடுப்பூசி செலுத்தி கொண்டதாக ரகுவின் செல்போனுக்கு குறுஞ்செய்தி தகவல் உள்ளது.



 

செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியால் அதிர்ச்சியடைந்த ரகுவின் குடும்பத்தினர் கொரோனா தடுப்பூசி சான்றிதழை டவுன்லோட் செய்து பார்த்தபோது, பொம்மை தொழிலாளியான ரகு இன்று சின்ன காஞ்சிபுரம் நகர்ப்புற சுகாதார நிலையத்தில் 2 ஆவது தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர் நபருக்கு தடுப்பூசி செலுத்தியதாக குறுஞ்செய்தி அனுப்பியதுடன், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.



 

இச்செயல் ரகுவின் குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக மக்கள் அனைவருக்கும் தடுப்பூசியை செலுத்தி விட வேண்டும் என நடவடிக்கை மேற்கொண்டு தமிழக அரசு மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தி வரும் நிலையில் சுகாதார துறை ஊழியர்களின் அலட்சியத்தால் உயிரிழந்தவருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக வந்த தகவலால் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



 

மேலும் இதுபோன்ற குறுஞ்செய்திகள் எவ்வளவு பேருக்கு சென்று உள்ளதோ என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.இது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது பதில் அளிக்க மறுத்துவிட்டனர். இவ்வாறு உயிரிழந்தவர் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தியதாக சான்றுகள் சென்றது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்பதே தற்போது கோரிக்கையாக உள்ளது.