வட கிழக்கு பருவ மழையால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்தது. நீர் நிலைகள் நிரம்பி, ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்தது. பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.


வெள்ள பாதிப்பு குறித்து தமிழ்நாடு அரசு எடுத்த கணக்கெடுப்பில் 2,629.29 கோடி ரூபாய்க்கு சேதம் ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில், எம்.பி., - டி.ஆர்.பாலு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து முதல்கட்டமாக உடனடியாக 549.63 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கும்படி கோரிக்கை விடுத்தார்.


இதற்கிடையே தமிழ்நாடு வெள்ள பாதிப்புக்கு கூடுதல் நிவாரணம் மத்திய அரசிடம் கேட்கப்படும் என வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்திருந்தார். இதனையடுத்து மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட, மத்திய குழு தமிழ்நாட்டுக்கு அனுப்பப்படும் என மத்திய அரசு தெரிவித்தது.




அதன்படி, மத்திய உள்துறை இணை செயலர் ராஜீவ் சர்மா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில், நிதி மற்றும் செலவினங்களுக்கான அரசு ஆலோசகர் ஆர்.பி.கவுல், விவசாயத் துறை இயக்குனர் விஜய்ராஜ் மோகன், மத்திய நீர்வள கமிஷனின் சென்னை இயக்குனர் தங்கமணி. மத்திய அரசின் சாலை போக்குவரத்து அமைச்சக மண்டல அதிகாரி ரனன்ஜெய் சிங், மின் துறை துணை இயக்குனர் பாவ்யா பாண்டே, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி வரபிரசாத் ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். 


 






நேற்று சென்னை வந்த இவர்கள் ரிப்பன் கட்டட வளாகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகள் குறித்த புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டு, உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.


இந்நிலையில் மத்தியக் குழுவினர் இன்று (22.11.2021) பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட வீராசெட்டி தெரு, புளியந்தோப்பு நெடுஞ்சாலை மற்றும் ஜவஹர் நகர் ஆகிய பகுதிகளிலும், ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட அழகப்பா சாலையிலும் மழை வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண