கொரோனா ஊரடங்கு நெறிமுறைகள் தளர்த்தப்பட்டாலும் அவற்றைக் கட்டாயம் பின்பற்றவேண்டும், முகக்கவசம் அணிவதைத் தவிர்க்கவேண்டாம் என சென்னை மாநகரக் காவல் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்த அறிக்கையில், “கொரோனா தொற்று பரவலை தடுக்கும்பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு காலத்தில் நேற்று (08.06.2021) கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியது தொடர்பாக 4,280 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2,297 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. முகக்கவசம் அணியாத 3,124 நபர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத 192 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.




கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு, தமிழக அரசால் 10.5.2021 முதல் 24.5.2021 காலை வரையில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் தீவிர நடவடிக்கையாக, 24.5.2021 காலை முதல் 07.6.2021 காலை வரை தளர்வுகளில்லாத முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து வந்த நிலையில், தமிழக அரசு 7.6.2021 காலை முதல் 14.6.2021 காலை வரை சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது. அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், முறையான தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு பணிகளை தீவிரபடுத்த பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


அதன்பேரில், சென்னை பெருநகரில் உள்ள 12 காவல் மாவட்ட எல்லைகளில் 13 எல்லை வாகன தணிக்கை சாவடிகள் மற்றும் அனைத்து காவல் நிலைய எல்லைகள் செக்டார்களாக வகைப்படுத்தி உரிய சாலை தடுப்புகள் மற்றும் வாகனத் தணிக்கைச் சாவடிகள் அமைத்து கண்காணித்து, மிக அத்தியாவசிய தேவைக்காக பொதுமக்கள் செல்ல இ-பதிவு சான்று கட்டாயமாக்கப்பட்டு, இ-பதிவு வைத்திராத பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.


இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர போக்குவரத்து காவல் குழுவினர் நேற்று (08.6.2021) மேற்கொண்ட சோதனையில், கொரோனா ஊரடங்கு தடையை மீறி அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் சென்றது தொடர்பாக 2,989 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய 548 இருசக்கர வாகனங்கள், 23 ஆட்டோக்கள் மற்றும் 6 இலகுரக வாகனங்கள் என மொத்தம் 577 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், சட்டம் ஒழுங்கு காவல் குழுவினர் நேற்று (08.6.2021) மேற்கொண்ட வாகனத் தணிக்கை மற்றும் ரோந்து கண்காணிப்பு சோதனையில், சென்னை பெருநகரில் கொரோனா ஊரடங்கு தடையை மீறியது தொடர்பாக 1,291 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றியது தொடர்பாக 1,578 இருசக்கர வாகனங்கள், 105 ஆட்டோக்கள், 28 இலகு ரக வாகனங்கள் மற்றும் 09 இதர வாகனங்கள் மொத்தம் 1,720 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், முகக்கவசம் அணியாமல் சென்றது தொடர்பாக 3,124 வழக்குகளும், சமூக இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 192 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தமிழக அரசின் ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து கொரோனா தொற்றை தடுக்க சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது" எனக் கூறப்பட்டுள்ளது.


Also Read: தமிழகத்தில் 25 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தலைமை செயலாளர் உத்தரவு..!